சென்னை: முதல்வர் தொகுதியான ஆர்கேநகர் பகுதியை சேர்ந்த தண்டையார் பேட்டையில் போதை சாக்லெட் விற்பனை செய்துவந்த கடை பொதுமக்களால் அடித்து நொறுக்கப்பட்டது.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தண்டையார்பேட்டை நேரு நகரை சேர்ந்த 9வது வகுப்பு படிக்கும் சிறுவன் தண்டையார்பேட்டை நேதாஜி நகரில் உள்ள கடையில் சாக்லேட் வாங்கி சாப்பிட்டான். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தான். உடனடியாக அவனை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.
ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து போதை சாக்லேட் விற்றதாக சுரேஷ் மகோதா உள்பட 3 வியாபாரிகளை கைது செய்தனர்.
மேலும் சாக்லேட்டில் கலந்துள்ள போதை மருந்து குறித்து அறிய அதனை பரிசோதனைக்கும் அனுப்பி வைத்தனர்.
கடந்த ஒரு வாரமாக மூடப்பட்டு இருந்த சுரேஷ் மகோதாவின் கடையை இன்று அவரது மனைவி திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டார்.
இதை பார்த்து ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கடையை முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கடைக்குள் புகுந்து பொருட்களை சூறையாடினர். கடையை அடித்து நொறுக்கினர். கடையின் உரிமையாளர் சுரேஷ் மகோதாவின் மனைவிக்கும் அடி விழுந்தது.
ஆர்.கே.நகர் போலீசார் விரைந்து சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களை கலைந்துபோக செய்தனர். இதுபற்றி போலீசார் மேல்வி சாரணை நடத்தி வருகிறார்கள்.