மும்பை:
போதிய நிதி இல்லாததால் மகாராஷ்டிர மாநிலத்தில் தொல்லியல் துறையின் அகழ்வாராய்ச்சிப் பணி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
வசதி படைத்த மகாராஷ்டிர மாநிலத்தில் நிதி ஒதுக்கீடு போதிய அளவு இல்லாததால், மாநில தொல்லியல் மற்றும் அருங்காட்சியகத் துறை ஸ்தம்பித்துப் போயுள்ளது.
நிதி இல்லாததால் இந்த ஆண்டுக்கான அகழ்வாராய்ச்சிப் பணிகளை நிறைவேற்றுவதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அம்மாநில கலாச்சாரத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறும்போது, “கூடுதல் நிதி ஏதும் ஒதுக்காததால், இந்த ஆண்டு புதிதாக அகழ்வாராய்ச்சி ஏதும் செய்ய முடியவில்லை. ஆராய்ச்சிப் பணிக்காக ரூ. 107 கோடி கேட்டுள்ளோம்.
ஆனால் நடப்பு ஆண்டுக்கு ரூ.24 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அகழ்வாராய்ச்சிக்காக தனி பட்ஜெட் போடுவதற்கான வாய்ப்பு ஏதும் இல்லை. மாநிலம் முழுவதும் உள்ள 13 அருங்காட்சியங்கள், 40 ஆயிரத்துக்கும் அதிகமான தொல்பொருட்கள், 371 நினைவிடங்கள் ஆகியவற்றை பராமரிப்பதற்காக, அகழ்வாராய்ச்சியை கைவிட வேண்டியுள்ளது ” என்றார்.