லக்னோ:

கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பொருளாதார ரீதியாக 10 சதவீதம் இட ஒதுக்கீடு தர மத்திய கேபினட் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது தேர்தல் ஸ்டண்ட் என, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
பொருளாதார ரீதியாக நலிவுற்றோருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க மத்திய கேபினட் எடுத்துள்ள முடிவு தேர்தல் ஸ்டண்ட் மற்றும் அரசியல் தந்திரம்.
இது முதிர்ச்சியற்ற முடிவாகும்.

எல்லா தரப்பினரின் செல்வாக்கையும் இழந்துவிட்ட நிலையில், உயர் சாதியினரின் வாக்கு வங்கியை கவருவதற்காகவே இந்த 10 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டே பாஜக இந்த முடிவை எடுத்துள்ளது. பொதுப்பிரிவில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு அறிவித்திருப்பது முதிர்ச்சியற்ற தன்மை காட்டுகிறது.

இது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதி, பொதுப்பிரிவுக்கு இட ஒதுக்கீடு கொண்டு வந்தால், மற்ற பிரிவினர் பாதிக்கப்படுவார்கள் என்று எச்சரித்திருந்தேன்.

முஸ்லிம்கள் மற்றும் மற்ற சிறுபான்மையினருக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். ஆனால் அவர்கள் அதைக் கண்டு கொள்ளவில்லை. இது தேர்தல் ஸ்டண்டாக இருந்தாலும் வரவேற்கின்றேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.