சென்னை

ரிசர்வ் வங்கி இயக்குனர் குருமூர்த்தி தான் பதிந்த டிவிட்டர் பதிவை நீக்கி உள்ளார்.

ரிசர்வ் வங்கி இயக்குனரும் பாஜக ஆதரவு பத்திரிகையாளருமான எஸ் குருமூர்த்தி தனது டிவிட்டரில் பல அரசியல் பதிவுகள் பாஜகவுக்கு ஆதரவாக பதிந்து வருகிறார். அவருடைய பதிவுகல் பலமுறை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் பல சர்ச்சைக்குரிய பதிவுகளை அவர் நீக்கினாலும் அந்த பதிவின் ஸ்கிரீன் ஷாட்டை பலரும் மறுபதிவு செய்கின்றனர்.

இன்று காலை அவர் ஒரு செய்திதாளின் புகைப்படத்துடன் டிவிட்டரில் ஒரு பதிவை இட்டுள்ளார். அந்த 2001 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி இட்ட செய்தித் தாளில் இந்திய அரசியல்வாதி போதை மருந்து வைத்திருந்ததாக பாஸ்டன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாகவும் அந்த அரசியல்வாதியின் தந்தை முன்னாள் பிரதமர் எனவும் செய்தி உள்ளது.

குருமூர்த்தி தனது பதிவில், “இந்த செய்தியை படியுங்கள். அந்த முன்னாள் பிரதமரின் மகன் யராக இருக்கும்?” என கேள்வி எழுப்பி உள்ளார். அந்த பதிவில் ஒரு சிலர் தங்கள் பின்னூட்டத்தில் இந்த செய்தித்தாள் பதிவு உண்மை இல்லை எனவும் உருவாக்கப்பட்டது எனவும் தெரிவித்திருந்தனர்.

அதை ஒட்டி அந்த பதிவை குருமூர்த்தி பதிந்த ஒரு மணி நேரத்தில் நீக்கி உள்ளார். அத்துடன் தாம் நீக்கியதற்கு விளக்கமும் அளித்துள்ளார். இது போல தவறான தகவல்கள் கொண்ட செய்தித் தாள் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் உலவி வருவது சகஜமாகும். ஏற்கனவே ராகுல் காந்தி, அமித் ஷா, கெஜ்ரிவால், சோனியா காந்தி, யோகி உள்ளிட்ட பலரை குறித்தும் தவறான செய்திகள் வந்துள்ளன.

ஆனால் ஒரு மூத்த பத்திரிகையாளர் இது குறித்து ஆராயாமல் வெளியிட்டதற்காக நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.