திருவனந்தபுரம்:
கேரளாவை சேர்ந்த பெண் பத்திரிக்கையாளருக்கு 2000 செல்போன் அழைப்புகள் மூலம் மிரட்டல் விடுத்த சம்பவத்தில் இந்து அமைப்புகளை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தள்ளனர்.
மஹிஷாசுர் ஜெயந்தி கொண்டாடுவது தேச துரோக செயலா என்பது குறித்த விவாத நிகழ்ச்சி ஏசியா நெட் செய்தி தொலைக்காட்சியில் நடந்தது. இதற்காக அந்த தொலைக்காட்சியின் ஒருங்கிணைப்பு குழு தலைமை ஆசிரியர் சிந்து சூர்யகுமாருக்கு, இந்து ஆதரவு அமைப்புகளிடம் இருந்து 2 ஆயிரம் மிரட்டல் அழைப்புகள் அவரது செல்போனுக்கு வந்தள்ளது.
ஒரு நிமிடத்திற்கு ஒரு அழைப்பு என்ற கணக்கில் தொடர்ந்து அழைப்பு வந்து கொண்டே இருந்துள்ளது. விவாத நிகழ்ச்சியில் ‘துர்கா ஒரு பாலியல் தொழிலாளி’ என்று கூறியதற்காக இந்த மிரட்டல்கள் வந்தது தெரியவந்தது. போனில் பேசிய பலர் ஆபாசமான வார்த்தைகளால் பேசியுள்ளனர். இதனால் அச்சமடைந்த சிந்து சூர்யகுமார் இது குறித்து அவரது அலுவலகத்தின் கவனத்துக்கு கொண்டுச் சென்றார்.
இது குறித்து அந்த நிறுவன செய்தியாளர் ஸ்பர்ஜன் குமார் திருவனந்தரபுரம் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் பாஜ, ஆர்எஸ்எஸ், ஸ்ரீ ராம சேனா உள்ளிட்ட இந்து அமைப்பகளை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிந்து சூர்யகுமாரின் செல்போன் நம்பரை சங் த்வானி என்ற வாட்ஸ் அப் குரூப்பில் பரப்பியுள்ளனர். அவரை தொடர்பு கொண்டு மிரட்டுமாறு வாட்ஸ் அப் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், இந்த தகவலை பேஸ்புக்கிலும் பதிவேற்றம் செய்துள்ளனர். பேஸ் புக்கில் முதலில் பதிவேற்றம் செய்தவர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து கேரளா பத்திரிக்கையாளர் சங்கத்தினர் தலைமைச் செயலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.