ஒருவழியாக, தான் பெண்ணாகரம் தொகுதியில் போட்டியிடப்போவதாக அறிவித்துவிட்டார், பா.ம.க.வின் முதல்வர் வேட்பாளரான அன்புமணி.
அங்கு அவரது வெற்றி வாய்ப்பு எப்படி?
ஏற்கெனவே அவர் வெற்றிபெற்ற தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்குள்தான் இந்த பெண்ணாகரம் வருகிறது என்பது அன்புமணிக்கு ப்ளஸ். அது மட்டுமே ப்ளஸ். மற்றபடி அவருக்கு எதிராக அதி தீவிரமாக களம் இறங்கியிருக்கிறது அ.தி.மு.க.
பலமட்டத்தில் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள்:
அன்புமணி டெபாசிட் வாங்கிவிடக்கூடாது என்று தர்மபுரி மாவட்ட அ.தி.மு.கவுக்கு மேலிடம் கட்டளை இட்டிருக்கிறது. தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதி ஒன்றில்தான் அன்புமணி போட்டியிடுவார் என்பதை ஏற்கெனவே யூகித்த அ.தி.மு.க. தரப்பு, அங்கெல்லாம் அன்புமணிக்கு எதிரான அஸ்திரங்களை பலப்படுத்தி வைத்திருக்கிறது.
கடந்த இரு மாதங்கள் முன்பாகவே, இந்த பகுதியில் கிராமம் கிராமமாக ஒரு பிரச்சாரத்தை எந்தவித சலசலப்பும் இல்லாம் நடத்தி முடித்திருக்கிறது அ.தி.மு.க.தரப்பு. அதாவது, பா.ம.கவில் இருந்து ஒரம்கட்டப்பட்ட வன்னிய இன பிரமுகர்களை, கிராமம் கிராமமாக அனுப்பியது. பா.ம.கவின் போராட்டங்கள், கிளர்ச்சிகளால் அடிமட்ட வன்னிய மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு, இட ஒதுக்கீடு முதல் பல போராட்டங்களில் கலந்துகொண்டவர்களின் இன்றைய நிலை, அப் போராட்டங்களில் கலந்துகொண்டு உயிரிழந்த குடும்பத்தினர் நிலை ஆகியவை குறித்து இப்பகுதி வன்னிய மக்கள் மத்தியில் சைலன்ட்டாக பிரச்சாரம் நடந்து முடிந்துவிட்டது. இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, ஆரம்ப காலத்தில் ராமதாஸ் குடும்பம் இருந்த நிலை, தற்போது அவர்களது பொருளாதார வசதிகள் குறித்தும் விளக்கப்பட்டன. மேலும், மத்திய அமைச்சராக இருந்தபோது, அன்புமணி, சொந்தங்களுக்கு என்ன செய்தார் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.
இதனால் தர்மபுரி பகுதியில் பா.ம.கவுக்கு எதிரான மனநிலையை ஏற்கெனே அ.தி.மு.க. ஏற்படுத்திவைத்துவிட்டது.
மேலும் மத்திய அமைச்சராக அன்புமணி இருந்தபோது ஊழல் குற்றச்சாட்டு எழுந்து தற்போது சி.பி.ஐ. கோர்ட்டில் வழக்கு நடந்துவருகிறது.
இந்த விவகாரம் குறித்து, சிறு புத்தகம் ஒன்று அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் இருக்கிறது. அன்புமணி போட்டியிடும் தொகுதியில் விநியோகிக்க என்றே தயாரான இப் புத்தகம், பெண்ணாகரத்தில் வீட்டுக்கு வீடு தரப்படும் என்கிறார்கள்.
“முதலில் பெண்ணாகரம் தொகுதிக்கு அ.தி.மு.க. சார்பாக வேலுமணிதான் அறிவிக்கப்பட்டார். முனுசாமி வேப்பனஹள்ளி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். கடந்த வாரம் திடீரென பெண்ணாகரம் வேட்பாளராக முனுசாமி மாற்றப்பட்டார்.
ஆக, இங்குதான் அன்புமணி போட்டியிடுவார் என்று ஸ்மெல் செய்த அ.தி.மு.க. மேலிடம் முனுசாமியை மோதவிட தீர்மானித்திரு்ககிறது” என்கிறார்கள்.
முனுசாமி அப்படி என்ன ஸ்பெஷல்?
கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக செயலாளராகவும், அதிமுக ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினராகவும் கே.பி.முனுசாமி செயல்பட்டு வந்தார்.
ஐவர் அணியில் இருந்த கே.பி.முனுசாமி, 2014ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலுக்குக்குப் பின்னர் ஓரம்கட்டப்பட்டார். காரணம் தருமபுரி தொகுதியில் அன்புமணி ஜெயிப்பதற்கு கே.பி.முனுசாமிதான் காரணம் என்ற பரவசிய தகவல்தான்.
இப்போது ”அன்புமணியை அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றால்தான் முனுசாமிக்கு அரசியல்வாழ்வு. இல்லாவிட்டால் எதிர்காலம் அவ்வளவுதான்” என்று மேலிடத்தால் அறிவுறுத்தப்பட்டே இங்கே மாற்றப்பட்டார்.
ஆக, ஏற்கெனவே அன்புமணியால் பறிபோன அரசியல்வாழ்க்கையை, தற்போது அன்புமணியை வெல்வதன் மூலம் பெறவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் முனுசாமி. இவர் சுற்றிச் சுழன்று களத்தில் செயல்படுவார்.
கே.பி. முனுசாமியின் அரசியல் ப்ளாஷ்பேக்…
அதிமுக துவங்கப்பட்ட காலம் முதல் அந்தக் கட்சியின் உறுப்பினராக இருக்கிறார் கே.பி.முனுசாமி. ஆரம்பத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் அணியில் பொறுப்பு வகித்தார். பிறகு கட்சிப் பொறுப்புகள் பலவற்றில் இருந்துள்ளார்.
கடந்த 1991 -ம் வருடம் காவேரிப்பட்டினம் தொகுதியில் இருந்தும், அதன்பின் கிருஷ்ணகிரி தொகுதியில் இருந்து லோக்சபாவிற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் காவேரிப்பட்டினம் தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவருக்கு அமைச்சர் பொறுப்பு ஏதும் வழங்கப்படவில்லை.
2011 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் கிருஷ்ணகிரி சட்டப் சபைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அவருக்கு மிக முக்கிய துறையான நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் பொறுப்பு அளிக்கப்பட்டது.
2014ம் ஆண்டு மே மாதம் வரை அவர் அந்தத் துறையின் பொறுப்புகளை கவனித்து வந்தார். ஐவரணியிலும் இடம்பெற்றிருந்தார்.
அப்போது நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அன்புமணிக்கு ஆதரவாக செயல்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து கட்சிப்பதவி, அமைச்சர் பதவியைப் பறித்து ஒதுக்கப்பட்டார்.
இப்போது மீண்டும் அரசியலில் உயர அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதாவது அன்புமணியை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெல்ல வேண்டும்.
முனுசாமியின் செல்வாக்கு எப்படி..
பொதுவாகவே தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதியில் வன்னியர்கள் மத்தியிலும் பிற சமூகத்தவரிடமும் செல்வாக்கு பெற்றவர் முனுசாமி. அமைச்சராக இருந்தபோதும் அதற்கு முன்பும் பிறகும் அனைவரிடமும் எளிமையாக பழகுபவர். தேர்தல் கள அனுபவம் நிறைய உள்ளவர்.
பிற கட்சி வேட்பாளர்கள்..
திமுக சார்பாக பெண்ணாகரம் தொகுதியில் போட்டியிடுபவர் இன்பசேகரன். இருக்கிறார். மக்கள் நலக்கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பென்னாகரம் தொகுதியில் போட்டியிடுகிறது. சீமான் கட்சி வேட்பாளரும் களத்தில் இருக்கிறார்.
வெற்றி யாருக்கு..
இப்போதைய சூழலைப் பார்க்கும்போது, கே.பி. முனுசாமிக்கும் அன்புமணிக்குமே போட்டி. மற்றவர்கள் அதற்கு பின்னால்தான் வருகிறார்கள்.