டில்லி

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பாஜக கூட்டணி தலைவர் நிதிஷ்குமார் கோரிக்கை  விடுத்துள்ளார்.

பெகாசஸ் ஸ்பைவேர் என்பது இஸ்ரேலில் செல்போன் உரையாடல்களை ஒட்டுக்கேட்க உதவும் மென்பொருளாகும். இந்த மென்பொருளைப் பயன்படுத்தி இந்தியாவில் மத்திய அமைச்சர்கள்,  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள்,  செய்தியாளர்கள், என பலரது அலைப்பேசிகளும் ஒட்டுக் கேட்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின.

நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்காலத் தொடர் கூட்டத்தில் தொடக்க நாளான ஜூலை 19 முதல் இது குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றனர்.  இதற்கு மத்திய பாஜக அரசு மறுத்துள்ளதால்  அமளி ஏற்பட்டு நாடாளுமன்ற தொடர் நடக்க முடியாமல் உள்ளது.

இந்நிலையில் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தள தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார், “ஊடகச் செய்திகள்,  நாடாளுமன்ற விவாதம் ஆகியவை மூலம் மட்டுமே மக்கள் பெகாசஸ் குறித்து அறிகின்றனர்.  எனவே பெகாசஸ் விவகாரம் தொடர்பான உண்மை நிலையை அறிய இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும்.

தற்போதைய காலகட்டத்தில் பலரும் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தி அலைப்பேசியை ஒட்டுக் கேட்கின்றனர்.  இதைத் தவிர்க்க விசாரணை மேற்கொள்ள வேண்டும்.  எதிர்க்கட்சிகள் இது குறித்து பிரச்சினைகள் எழுப்புவதால் விசாரணை நடத்தி உண்மையை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்” எனக் கூறி உள்ளார்.

பாஜக கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சித் தலைவரே பெகாசஸ் குறித்து விசாரணை கோருவது இதுவே முதல் முறையாகும்.   இதையொட்டி நிதிஷ்குமாருக்கு இணையத்தில் நெட்டிசன்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.