ss

விஜய் நடிக்கும் “புலி” படத்தின் வேலைகள் எல்லாம் முடிந்து  அக்டோபர் ஒன்றாம் தேதி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  விஜய் படம் என்றாலே எதிர்பார்ப்பு  இருக்கும். இந்தப்படத்தில்   ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப்  என்று  பெரிய நட்சத்திரங்கள் நடித்திருப்பது, வித்தியாசமான  கதைகளை இயக்கும் சிம்புதேவன்  இயக்குவது, பிரம்மாண்டமான செட்கள், கிராபிக்ஸ் என்று  எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் “புலி” படத்துக்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.  வழக்கு தொடர்ந்திருப்பவர்  தஞ்சை மாவட்டம் திருக்காட்டுபள்ளியைச் சேர்ந் அன்பு ராஜசேகர் என்பவர்.

அவரை தொடர்பு கொண்டு பேசினோம்.

அவர், “ஏ.ஆர்.முருதாஸ் இயக்கி, விஜய் நடித்த கத்தி படத்தின் கதை என்னுடையது. நான் இயக்கிய தாகபூமி என்ற குறும்படத்தின் கதையைத்தான் அப்படியே கத்தி என்ற பெயரில் எடுத்துவிட்டார்கள்.  என் கதையை திருவிட்டார்கள் என்பதால் வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கு   தஞ்சை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.   விஜய், முருகதாஸ் உள்ளிட்டவர்கள் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அவர்கள் ஆஜராகவில்லை.  இந்த நிலையில் விஜய் தனது அடுத்தபடமான “புலி”யை ரிலீஸ் செய்ய ஆயத்தமாகிவருகிறார்.

ஆகவே, “கத்தி பட விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை நிலுவையில்  இருக்கிறது. ஆகவே வழக்கு முடியும்  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படம், விஜய் நடிக்கும் படங்களுக்கு வெளிவர தடைவிதிக்க வேண்டும்” என்று  நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறேன்” என்றார்.

அன்பு ராஜசேகரின்  மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இந்த மனுமீது விளக்கம் அளிக்க இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளது.  வழக்கு விசாரணையை வருகிற 28ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.

இந்த தகவல் அறிந்த விஜய் அதிர்ச்சி அடைந்துள்ளார்.   “ஏற்கெனவே படத்தின் கதை இதுதான், காட்சிகள் இதுதான் என்று பலரும் பலவிதமான யூகங்களை கிளப்பி வருகிறார்கள். இந்த நிலையில் வழக்கால், படம் தாமதமானால் சிக்கல் ஏற்படுமே” என்று  புலிபடத் தயாரிப்பாளரும், தனது மேனேஜருமான பி.டி. செல்வகுமாரின்  வருத்தப்பட்டிருக்கிறார் விஜய்.

இதையடுத்து, வழக்கை விரைந்து முடிக்க சட்டரீதியான முயற்சிகளை விரைவுபடுத்தியிருக்கிறார் பி.டி. செல்வகுமார். இன்னொரு பக்கம், “கோர்ட்டுக்கு வெளியில் பிரச்சினையை “பேசி” தீர்க்கும் முயற்சியும் நடக்கிறது” என்றும் சொல்லப்படுகிறது.