Untitled-5
 
விடுதலைப்புலிகள் அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த மறைந்த தமிழினி எழுதிய “ஓர் கூர்வாளின் நிழலில்…” என்று தன் வரலாற்று நூல் உலகத் தமிழரிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
விடுதலைப்புலிகள் இயக்க மற்றும் தலைமையின் நடவடிக்கைகள் குறித்து நூலில் சில விமர்சனங்களையும் வைத்திருக்கிறார் தமிழினி. இது விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.   ஏற்கெனவே விடுதலைப்புலிகள் இயக்கத்தை கண்மூடித்தனமாக எதிர்ப்பவர்கள், “ஆகா, மிகச் சரியாக சொல்லிவிட்டார் தமிழினி” என்கிறார்கள். அதே போல கண்மூடித்தனமாக விடுதலைப்புலிகளை ஆதரிப்பவர்கள், “தமிழினி துரோகம் செய்துவிட்டார்” என்கிறார்கள்.
ஆனால் இருதரப்பாரிலும் பெரும்பாலானவர்கள், ஈழம் குறித்து கொண்டிருக்கும் கருத்துக்கு, வேறு காரணங்கள் ஏதாவது இருக்கின்றன.  
ஆகவே,  ஈழம் குறித்தும், விடுதலைப்புலிகள் குறித்தும்  அந்த கள சூழல் குறித்தும் முழுதும் அறிந்தவர்களிடம், தமிழினியின் புத்தகத்தை விமர்சிக்க கேட்கலாம் என எண்ணினோம். குறிப்பாக ஊடகவியலாளராக இருந்தால் சிறப்பு என நினைத்தோம். 
உடனடியாக நம் நினைவுக்கு வந்தவர் என். ஜீவேந்திரன்.
மிகச் சிறந்த ஊடகவியலாளரான இவர், இலங்கையில் இருந்து வெளியாகும் வீரகேசரி இதழிலும், யங் ஏசியா தொலைக்காட்சியிலும் சிறப்புற பணியாற்றியவர். பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில், ஈழப்போர்க் களங்களுக்கு நேரில் சென்று செய்தி சேகரித்தவர். புலிகளின் தளபதிகள் பலரை முதன் முதலாக தொலைக்காட்சி பேட்டி எடுத்தவர்.
இவரை இலங்கை அரசு கைது செய்ய முற்பட்டபோது, அங்கிருக்கும் சுவிட்சர்லாந்து தூதரகம் இவரை பாதுகாத்து தனது நாட்டுக்கு அனுப்பியது. அங்கிருந்து தனது ஊடகப்பணியைத் தொடர்கிறார் என். ஜீவேந்திரன்.
( 2000ம் ஆண்டு கடும்  போருக்குப் பிறவு ஆனையிறவு புலிகளின் கைக்கு வந்தது.  அந்த போரின்போது வீழ்த்தப்பட்ட டாங்கியின் மீது  அமர்ந்திருக்கிறார் என். ஜீவேந்திரன்.)
இதோ… தமிழினியின் “ஓர் போர்வாளின் நிழலில்…” புத்தகத்தை விமர்சிக்கிறார் என்.ஜீவேந்திரன்:
12729351_1024379040969342_2882615215426262599_n
 
விடுதலைப்புலிகளின் அரசியல்துறை மகளிர் அணி பொறுப்பாளர் தமிழினியின் ‘ஓர் கூர்வாளின் நிழலில்’ நூலை வாசித்தபோது எனக்கேற்பட்ட உணர்வுகள் விவரிக்கமுடியாதவை. தமிழினியை வன்னியில் நான் பல தடவைகள் சந்திருந்தேன். தொலைக்காட்சிக்காக நேர்காணலும் செய்திருந்தேன். அவர் எப்போதும் பழக மிக இனிமையானவராக இருந்திருந்தார். பின்னர் அவரது இறுதிக்காலத்திலும் முகநூல் மூலம் தொடர்புகொண்டிருந்தேன். அவரது நூலை வாசிக்கும் போது அந்த நினைவுகள் எல்லாம் வந்து சென்றன.
யார்மீதும் பழி சுமத்தாமல், யாரையும் திட்டித்தீர்க்காமல் தனக்கு தெரிந்த விடயங்களை தனது அனுபவங்களை தமிழினி நூலில் பகிர்ந்திருக்கிறார். யாருடைய மனதும் நோகக்கூடாது என்ற எண்ணத்துடன் அவர் இந்த நூலை எழுதியிருப்பது புரிகிறது. ஆனால் அவ்வாறு பாம்புக்கும் நோகாமல் தடிக்கும் நோகாமல் அடிப்பது சரியா என்ற விமர்சனம் எழக்கூடும்.
புலிகளில் முக்கிய பொறுப்பில் இருந்து உயிர் தப்பிய ஒருவர் என்ற வகையில் இப்படியொரு பெரும் அழிவிற்கான காரணங்களையும் தவறுகளையும் வெளிப்படையாக மக்களுக்கு தெரிவித்திருக்கவேண்டும். அப்படி செய்யாததன் மூலம் ஈழத்தமிழர்களின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்கு பங்களிக்க கூடிய வாய்ப்பை தமிழினி தவற விட்டு விட்டார் என்று என்று ஒரு சாரார் சொல்வார்கள்.
இன்னொரு சாரார் தமிழினி புலிகள் இயக்கத்திற்கு துரோகம் செய்துவிட்டார் என்று சொல்வார்கள்.
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுவென்பதால் அவற்றை புறந்தள்ளி நூல் பற்றி பார்க்கலாம்.
இலங்கை சிங்கள பௌத்த பேரினவாத அடக்குமுறையின் பாதிப்பும் அதற்கெதிரான விடுதலைப்புலிகளின் தாக்குதல்களும் ஈழத்தமிழர்களை வேறு உலகில் உலவ வைத்தது. தமிழீழம் நாளை பிறக்கும் என்று தமிழினி போன்ற விடுதலைப்புலி போராளிகள் மட்டுமன்றி சாதாரண தமிழ் மக்களும் நம்பினர். அந்த நம்பிக்கைக்கு மூல காரணமாக இருந்தவர் பிரபாகரன்.
ஆரம்ப காலங்களில் சக இயக்க சகோதரர்களையே அழித்த கொடுமையை செய்தவர் பிரபாகரன் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் பின்னர் புலிகள் இயக்கத்தை உலகமே வியக்கும் வண்ணம் மாபெரும் அமைப்பாக கட்டி எழுப்பியிருந்தார். மேலும் எந்த இயக்க போராளியும் தலைவர் கெட்டவர் தவறானவர் என்று சொல்லும்படி அவர் நடந்துகொண்டதில்லை என்பதை தமிழினியின் அனுபவங்கள் சொல்கிறது. தலைவர் குறித்த பிரமிப்பையும் எளிமையாக பழகும் பாங்கையும் திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பண்பையும் அவர் நூலில் விவரிக்கிறார்.
அதேவேளை 2002 சமாதான உடன்படிக்கைக்கு பின்னர் சர்வதேசத்தை கணித்து எதிர்கால திட்டங்களை அமைக்க பிரபாகரன் தவறிவிட்டார் என்பதை தமிழினி நூலில் குறிப்பிடுகிறார்-

தமிழினி
தமிழினி

‘ இறுதியாக நடந்த சமாதான பேச்சுவார்த்தைகளின்போது அதிகார பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிடவேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் பாலசிங்கம் உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் அமைந்த சமஷ்டி என்ற தீர்வைப்பரிசீலிக்க தயாராக இருப்பதாக ஒரு கருத்தை முன்வைத்திருந்தார். ஆனால் அந்த விடயம் தலைவர் பிரபாகரனுக்கு அவ்வளவு உவப்பானதாக இருக்கவில்லை. ஒரு அரசியல் தீர்வை திணிப்பதன்மூலம் புலிகளின் ஆயுதங்களை அவர்களிடமிருந்து பிடுங்குவதற்கு சர்வதேச சக்திகள் முனைவதாக அவர் குற்றம் சாட்டினார். அவர்கள் விரித்த வலைக்குள் அன்ரன் பாலசிங்கம் சிக்கிவிட்டதாக அவர் கருதினார். தமக்கு மரணம் ஏற்பட்டாலன்றி வேறு எந்த கட்டத்திலும் ஆயுதங்களை கையைவிட்டு இழப்பதற்கு தலைவர் கிஞ்சித்தும் தயாராக இருக்கவில்லை. அதனால் இருவருக்குமிடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு ஒருவரோடொருவர் முகம்கொடுத்து பேசிக்கொள்ளவும் விரும்பாத ஒரு நிலையில் மிகவும் மனமுடைந்தவராகவே அன்ரன் பாலசிங்கம் இறுதியாக கிளிநொச்சியைவிட்டு வெளியேறியிருந்தார்.’
‘ முன்னெப்போதும் இல்லாத வகையில் தமிழர்களின் அரசியல் பிரச்சனை மேற்குலக மத்தியஸ்தத்துடன் கையாளப்படும் நிலையை எட்டியிருந்ததனால் அந்த அரசியல் சூழலை கையாளக்கூடிய ராஜதந்திர துணிச்சல் புலிகளின் தலைமைக்கு அதிகம் தேவைப்பட்டது. சமாதான சூழ்நிலையில் அரசியல் ராஜதந்திரத்தின் நுணுக்கங்களை துணிச்சலுடன் பயன்படுத்தி தமிழர்களுக்கு அரசியல் தீர்வை பெற்றுத்தரும் நிலையை நோக்கி முன்னேறிச்செல்லமுடியாமல் திணறத்தொடங்கினார். வாழ்வாதாரங்கள் எல்லாவற்றையும் இழந்துபோன நிலையிலும் போராட்டத்தை நம்பியிருந்த மக்களுக்காக தனது பிடிவாத குணத்திலிருந்து வெளியே வரவேண்டியவராக தலைவர் பிரபாகரன் இருந்தார்.ஆனால் அதை அந்த நேரத்தில் செய்வதற்கான துணிச்சலற்றவராகவே இருந்தார்.’
பிரபாகரன்
பிரபாகரன்

இவையே தமிழினி, பிரபாகரன் மீது சொல்லும் ஒரே குறையாக இருக்கிறது. அடுத்தடுத்த வரிகளில் அதற்கான காரணத்தை இப்படி சொல்கிறார்-
‘உலகத்தையே பகைத்துக்கொண்டு ஒரு விடுதலைப்போராட்டத்தில் வெற்றியடைதல் எப்படி சாத்தியமாகும் என்ற அளவிற்கேனும் சிந்திக்கத்தோன்றாதவாறு புலிகள் இயக்கத்தின் இராணுவ பலத்தின் மீதான நம்பிக்கை அனைவரது கண்களையும் கட்டிப்போட்டிருந்தது’
தமிழினி தனது நூலில் புலிகள் அமைப்பு இராணுவ ரீதியில் தோல்வியை தழுவ காரணமான இரண்டு முக்கிய விடயங்களை சொல்கிறார். ஈழ அரசியல் தெரிந்த எல்லோரும் அறிந்த காரணங்கள்தான் அவை.
01.புலிகள் அமைப்பின் அரைப்பங்கு போராளிகளுடன் கருணா பிரிந்து சென்றமை.
ஜெயசிக்குறு உட்பட பல போர்களில் புலிகள் ஈட்டிய வெற்றிக்கு கருணாவும் கிழக்கு மாகாண போராளிகளும் காரணமாக இருந்தார்கள் என்பதை யாரும் அறிவர்.
பெரும்பாலான வடக்கை சேர்ந்த இளையவர்கள் வெளிநாடுகளுக்கும் கொழும்புக்கும் சென்றுவிட்ட நிலையில் புலிகளின் படையணியை தாங்கிப்பிடித்தது கிழக்கு மாகாணமே. அப்படியான யதார்த்தத்தில் கருணா புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறும் சூழல் ஏற்பட்டமை பெரும் பின்னடைவாக அமைந்தது. இந்த பின்னடைவு சமாதானம் முறிந்து போர் தொடங்கிய பின்னர் வெளிப்படையாக தெரிந்தது.
கருணாவின் பிளவுபற்றி தமிழினி குறிப்பிடும்போது இயக்க தளபதிகளிடையே காணப்பட்ட போட்டி பொறாமைகள் இதற்கு பின்புலமாக இருந்தமையை நாசுக்காக குறிப்பிடுகிறார்.
கருணா
கருணா

‘ சந்திப்பில் தலைவர் பல விடயங்களைப்பற்றியும் எம்மோடு பேசிக்கொண்டிருந்தார்.அதில் ஒரு சந்தர்ப்பத்தில் கூறினார்; ”மட்டக்களப்பு , அம்பாறை போராளிகள் போராட்டத்தில் எவ்வளவோ கஷ்டங்களைப்பட்டிருக்கிறாங்கள். அவங்கட குடும்பங்களுக்கும் அந்த மக்களுக்கும் நிறைய வேலைகளை செய்யவேணும். நிதித்துறை மூலமா ஓரளவு பண உதவியையும் செய்து கருணாவுக்கும் சொல்லியிருக்கிறேன், அந்த சனத்திற்கு நிறைய உதவிகள் செய்ய சொல்லி. அவன் செய்யிறான், இவங்கள் பொட்டு ஆக்கள் வந்து அங்க அது பிழை இது பிழை எண்டு சொல்லிக்கொண்டு நிக்கிறாங்கள். தளபதிமாருக்குள்ள முதலில் ஒற்றுமை இருக்கவேண்டும்” என்று குறிப்பிட்டார்.’
தமிழினியின் இந்த வரிகள் கருணா பிளவுக்கான காரணத்தை தெளிவாக சொல்லி நிற்கிறது.
கருணா பிளவின் பின்னர் ஒன்றாக உண்டு உறங்கி சொந்தங்களாக இருந்த கிழக்கு மாகாண சதோரதர்களை கொன்றமை குறித்து தமிழினி வருத்தம் தெரிவிக்கிறார். மேலும் கருணா மீதான குற்றசாட்டுக்களை போராளிகள் வழமைபோலவே கேள்வி கேட்காது ஏற்றுகொள்ள நேரிட்டது என்றும் குறிப்பிடுகிறார். ‘
‘தலைவர் எடுக்கும் முடிவுகளை விமர்சிப்பதோ, கேள்வி கேட்பதோ தெய்வ குற்றம் இழைப்பதற்கு சமமானதாக இயக்கத்திற்குள்ளே கருதப்பட்டது. இந்த போக்கின் வளர்ச்சியே இயக்கத்தின் உள்ளேயான விவாதத்தையும் விமர்சனத்தையும் இல்லாதொழித்தது அதன் மிக அவலகரமான முடிவுக்கும் வழிவகுத்தது.’ எனும் தமிழியின் கூற்று போராட்ட அமைப்புக்குள்ளும் கருத்து சுதந்திரம் உள்ளிட்ட ஜனநாயக பண்புகள் இருக்க வேண்டிய தேவையை சொல்லி நிற்கிறது.
தோல்விக்கான  இன்னொரு முக்கிய காரணம்.. ஆயுதப்பற்றாக்குறை.
கருணா பிளவுக்கு காரணமான அதே போட்டி பொறாமைதான் இதற்கும் காரணமாக அமைந்தது. கருணா பிளவில் சம்பந்தப்பட்ட பொட்டமான் இந்த விடயத்திலும் சம்பந்தப்பட்டமை ஆச்சரியத்திற்குரியதே.
கே.பியின் பொறுப்பிலிருந்த புலிகளின் சர்வதேச வலையமைப்பு பொட்டமானின் வழிநடத்தலில் காஸ்ட்ரோவுக்கு மாறியது. விமான எதிர்ப்பு ஏவுகணைகளை பெற்றுத்தர முடியவில்லை என்பதே இதற்கு கூறப்பட்ட காரணங்களில் ஒன்று. ஆனால் புதியவர்கள் பொறுப்பேற்ற பின்னர் புலிகளுக்கு ஆயுதங்கள் எதுவும் வந்து சேர்ந்திருக்கவில்லை. சுமார் 11 ஆயுதக்கப்பல்கள் இலங்கை படையினரால் அழிக்கப்பட்டதாக தகவல்கள் உள்ளன.
போர்
போர்

இந்த ஆயுத பற்றாக்குறை குறித்து தமிழினி குறிப்பிடும்போது;
‘ புலிகளின் ஆயுதக்கப்பல்கள் இப்படி தாக்கியழிக்கப்பட்டதன் காரணமாக இயக்கத்திடம் கைவசமிருந்த ஆட்லறி பீரங்கிகளுக்கு தேவையான எறிகணைகள் மற்றும் வெடி பொருட்களை தொடர்ந்து வெளிநாடுகளிலிருந்து பெற்று யுத்தத்தில் தாராளமாக பயன்படுத்துவதற்கான சாத்தியம் இல்லாமல் போனது. இறுதி யுத்தத்தின் ஆரம்பகட்டத்தில் இலங்கை ராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட படைநகர்வுகளை முறியடிப்பதற்கான புலிகளின் எதிர்த்தாக்குதல்களில் ஆட்லறி மற்றும் ஏனைய பீரங்கிகள் தாராளமான சூட்டாதரவை வழங்கி, முன்னணி களமுனைத்தாக்குதல் அணிகளுக்கு பக்கபலமாக செயல்பட்டன. புலிகளின் ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, போர்க்களத்தில் இராணுவத்தினருக்கு அதிகமான இழப்புகளை ஏற்படுத்தி, அவர்களின் முன்னேற்ற நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதில் புலிகளின் பீரங்கி படையணி பெரும் பங்காற்றியது. ஆனால் இதன்பின்னர் தொடர்ந்த சண்டைகளில் புலிகளுக்கு ஏற்பட்ட எறிகணைப்பற்றாக்குறை காரணமாக, இத்தகைய பின்னணி சூட்டாதரவு மிகவும் மட்டுப்படுத்தப்பட்டது. கூடுதலான தூர இடைவெளி கொண்ட காவலரண்களில் மிகவும் குறைந்த தொகையில் நிலைப்படுத்தப்பட்டிருந்த போராளிகளுக்கு தமது கையிலிருக்கும் துப்பாக்கியை விடவும், அவர்களது பின்னணியிலிருந்து ஏவப்படும் சரமாரியான பீரங்கி சூடுகளே பெருத்த உளவுரனாக இருந்தன.
முல்லைத்தீவு பளை பகுதியில் ஜீவேந்திரன் ( 2001)
பளை பகுதியில் ஜீவேந்திரன் ( 2001)

தமக்கெதிரே முன்னேறி நகர்ந்துவரும் ஒரு இராணுவத்தினனைக்கண்டதும் , உடனடியாகவே எறிகணை ஆதரவு தரும்படி தமது பகுதி கட்டளை மையங்களுக்கு அறிவித்தார்கள். இதனால் களமுனையில் படைகளை வழிநடத்தும் புலிகளின் இடைநிலைத்தளபதிகளும் பீரங்கிப்படையணியினரும் பெருத்த நடைமுறை சிக்கல்களை எதிர்கொண்டனர். அதேவேளை மலைபோல பொழியும் இராணுவத்தினரின் எறிகணை வீச்சு ஆதரவுடன், குண்டு துளைக்காத கவசங்களையும் அணிந்தபடி தாக்கவீச்சு கூடிய பி.கே. கனரக ஆயுதத்தினால் சரமாரியாக சூடுகளை வழங்கியபடி முன்னேறி வந்துகொண்டிருந்த இராணுவப்படைக்கு எதிராக நின்று தாக்குப்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் போர்க்களமுனைகளில் போராளிகளின் உயிர் இழப்புக்களும் மிகவும் அதிகமாக ஏற்பட்டன. இந்நிலையில் புலிகளின் தாக்குதல் அணிகள் பின்வாங்குவதைத்தவிர வேறு வழிகள் எதுவும் இருக்கவில்லை.’ என்கிறார்.
 
ஜீவேந்திரன்
ஜீவேந்திரன் 

மேலும் சமாதான காலத்தில் தமிழேந்தி மக்கள் மீது வரிவித்தமை, இறுதி சண்டையின்போது பிரபாகரனின் மகனான சார்ல்ஸ் அன்ரனி கட்டாய ஆட்சேர்ப்பில் பிடிவாதமாக இருந்தமை, மக்கள் தப்பி செல்லாது தடுத்து வைக்கப்பட்டமை, காயமடைந்த போராளிகள் மற்றும் பெண் போராளிகள் குறித்து கவனம் செலுத்தாமை போன்றவை குறித்த ஆதங்கங்களை தமிழினி தனது நூலில் வெளிப்படுத்துகிறார்.
போரில் தோல்வியடைந்த நிலையில் சரணடைய நேரிட்டது பற்றியும் அதன் பின்னரான தனது துன்பங்கள் குறித்தும் தமிழினி குறிப்பிடுகிறார். தோல்விக்கு முன்னர் சமுகத்தில் மிகுந்த மதிப்புடன் இருந்த போராளிகளை சரணடைந்த பின்னர் மக்கள் கேவலமாக நடத்தியமை, ”உதுகள் உயிரேடா வந்ததுக்கு சயனைட்டை கடிச்சிருக்கலாம்” என்ற பலரின் குத்தல்கள் என தனது துயர அனுபவங்களை தனது நூலில் பதிந்திருக்கிறார் தமிழினி.
தனது இளம் வயதிலேயே உறவுகளையும் வளமான எதிர்காலத்தையும் கைவிட்டு தமிழீழம் என்ற நோக்கத்திற்காக ஆயுதம் ஏந்திய தமிழினி இழந்தவைகள் ஏராளம். தனது தங்கையை உறவுகளை போரால் இழந்தார், பொருளாதாரம் அழிவுற்றும் இடப்பெயர்வாலும் அவரது குடும்பம் வறுமையால் வாடியது. அவரும் தனது வாழ்வின் பெரும்பகுதியை போராட்டத்திலேயே கழித்திருந்தார். தனது 43 வது வயதில் புற்றுநோய் காரணமாக இறக்கும் வரை அவர் நிம்மதியான வாழ்வை அனுபவிக்கவில்லை என்பது மிக துயரமானது.”