சென்னை:
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களான டோனி உள்ளிட்டவர்களை புனே, ராஜ்காட் அணிகள் ஏலம் எடுத்தன.
கிரிக்கெட் முறைகேடு காரணமாக ஐபிஎல் போட்டியில் பங்கேற்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவரான இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசனை உரிமையாளராக கொண்ட இந்த அணிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால் எதிர்வரும் 2016ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இடம்பெறுவது சாத்தியமில்லை. அதனால் இந்த அணியின் கேப்டனாக இருந்த டோனி சமீபத்தில் சென்னையில் சீனிவாசனை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போதே டோனி வேறு அணியில் சேரவுள்ளார் என்ற தகவல் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் நேற்று வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த டோனி, ஆல்ரவுண்டர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின், ஃபாஃப் டு ப்லெசிஸ் ஆகியோரை சஞ்சீவ் கோயங்காவை உரிமையாளராக கொண்ட புனே அணி ஏலம் எடுத்தது. அதேபோல் இதே அணியில் இருந்த ஆல்ரவுண்டர்கள் ரவீந்திர ஜடேஜா, த்வானே ப்ரேவோ, விக்கெட் கீப்பர் ப்ரெண்டான் மெக்குலம் ஆகியோரை கேசவ் பன்சாலை உரிமையாளராக கொண்ட ராஜ்காட் அணியும் ஏலம் ஏடுத்தது.
இது தவிர சுரேஷ் ரெய்னா, ஸ்டீவன் ஸ்மித் ஆகியோரை புனே அணியும், ஜேம்ஸ் ஃபால்க்னர் ஆகியோரை ராஜ்காட் அணியும் ஏலம் எடுத்தது. பல கோடி ரூபாய் கொடுத்து இந்த வீரர்களை அதன் உரிமையாளர்கள் ஏலம் எடுத்துள்ளனர். அடுத்து வரும் ஐபிஎல் போட்டிகளில் இவர்கள் இந்த அணி சார்பில் விளையாடுவார்கள்.