புதுச்சேரி : ஒரு வார காலத்துக்கும் மேல் நீடித்த குழப்பம் நீங்கி, புதுச்சேரி முதலமைச்சராக முன்னாள் மத்திய இணையமைச்சர் நாராயணசாமி தேர்வு செய்யப்பட்டார்.
புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைக்கு நடந்து முடிந்த தேர்தலில், காங்கிரஸ் கூட்டணி 17 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதிப்பெரும்பான்மை பெற்றது.
இந்த நிலையில் புதுவை முதல்வர் யார் என்ற போட்டி காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டது. பலரும் டில்லிக்குச் சென்று தங்கள் கரத்தை வலுவாக்க முயன்றனர். குறிப்பாக நமசிவாயம், வைத்தியலிங்கம், நாராயணசாமி ஆகியோருக்குள் கடும்போட்டி நிலவியது.
இந்த நிலையில் டில்லியில் இருந்து முகுல்வாஸ்னிக், ஷீலா தீட்சித் ஆகியோர் புதுவை வந்தனர். அவர்கள் முன்னிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில், காங்கிரஸ் சட்டமன்ற தலைவராக – அதாவது,முதல்வராக நாராயணசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
“நாராயணசாமி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். முதல்வர் போட்டியில் இருந்த நமச்சிவாயம், வைத்திலிங்கம் ஆகியோர் நாராயணசாமியின் பெயரை முன்மொழிந்தனர்” என்று காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 15 பேர் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், சட்டமன்ற உறுப்பினராக இல்லாத நாராயணசாமி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.