சென்னை:
திருவிளையாடல் விநாயகர், முருகன் மாம்பழ சண்டையைவிட, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் புத்திரர்களான அழகிரி, ஸ்டாலின் சண்டை ரொம்பவே பிரபலம்.
புராணக்கதை போல் இல்லாமல், இங்கே தம்பிக்காரர் ஜெயித்தார். அண்ணன், கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.
ஆனாலும், “மீண்டும் அழகிரி கட்சிக்கு வருகிறார்..” என்று அவரது ஆதரவாளர்கள் பூச்சாண்டி காட்டி வந்தார்கள்.
இதற்கிடையே அழகிரிக்கு நெருக்கமான பொட்டு சுரேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்னொரு நெருக்கமானவரான அட்டாக் பாண்டி கைது செய்யப்பட்ட.. அழகி வட்டாரம் அரண்டு போனது. இந்த நிலைியல், அழகிரி மகன் துரைக்கு நெருக்கமானவருக்கு கத்தி குத்து விழ.. அழகிரி வட்டாரத்தில் டென்சன் கூடியது.
இதனால் மு.க. ஸ்டாலின் மீதான தனது கிண்டலான பேச்சுக்களைக் குறைத்துக்கொண்டார் அழகிரி.
தவிர ஏற்கெனவே அவரது ஆதரவாளர்கள் பலர் ஸ்டாலின் பக்கம் வந்துவிட்டார்கள்.
ஆகவே இன அழகிரி சைலண்ட் மோடில்தான் இருப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் “அண்ணன் மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டார்” என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
இதற்கு ஆதாரமாக அவர்கள் சுட்டிக்காட்டுவது, சேலத்தில் துவக்கப்பட்டுள்ள “வீரபாண்டியார் மக்கள் இயக்கம்’ என்ற புதிய கட்சியைத்தான்.
சேலம் மாநகர, 45வது வார்டு முன்னாள் தி.மு.க., செயலர் ‘ஆட்டோ’ ராஜா, என்பவர், இந்த பெயரில் புதிய கட்சியை பதிவு செய்ய விண்ணப்பித்து இருக்கிறார்.
புதிய கட்சியின் கொடியில், கறுப்பு, சிவப்பு நடுவில் ஊதா நிறத்தில், வீரபாண்டி ஆறுமுகத்தின் படம் இருக்கிறது. “இந்த கட்சி துவக்கவிழா அழைப்பிதழில், வீரபாண்டி ஆறுமுகம், பெரியார் அண்ணா காமராஜர் ஆகியோரோடு அழகிரியின் படமும் இருக்கும்” என்கிறார்கள்.
இது குறித்து பேசிய ஆட்டோ ராஜா, “சேலத்தில் திமுகவின் ஆணிவேராக இருந்தவர் மறைந்த வீரபாண்டியார்தான். ஆனால் அவரை அப்போதே ஸ்டாலின் ஓரம்கட்ட முயற்சித்தார். அது நடக்கவில்லை. அவரது மறைவுக்குப் பிறகு, வீரபாண்டியாரின் மகன் ராஜா, தலையெடுக்கக்கூடாது என்று திட்டமிட்டு செயல்பட்டார் ஸ்டாலின்.
தற்போது ஸ்டாலின் ஆதரவாளரான சேலம் தி.மு.க.,வை பனமரத்துபட்டி ராஜேந்திரன் தான் நடத்துகிறார். அவர நடவடிக்கைகள் தொண்டர்களுக்கு எதிராக இருக்கின்றன. ஆனால் அது பற்றி புகார் கொடுத்தால் ஸ்டாலின் கண்டுகொள்வதே இல்லை.
ஆகவேதான் புதிய கட்சியை துவக்கியிருக்கிறோம். இது சேலத்தில் மட்டுமல்ல..தமிழகம் முழுதும் ஸ்டாலினால் பாதிக்கப்பட்ட திமுகவினரின் சரணாலயமாக இருக்கும்” என்கிறார்.
இவரிடம், “வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜாவுக்கு இதில் உடன்பாடா” என்று கேட்டோம். “இல்லை.. அவருக்கும் புதிய கட்சிக்கும் எந்த தொடர்பும் கிடையாது” என்கிறார்.
“அழகிரி படத்தையும் பயன்படுத்தியிருக்கிறீர்கள்.. அழகிரிக்கு இது உடன்பாடுதானா” என்றால், “ஸ்டாலினால் பாதிக்கப்பட்ட உண்மையான கட்சிக்காரர்களுக்கான கட்சி இது” என்கிறார்.
ஸ்டாலின் ஆதரவாளர்களான பனைமரத்துப்பட்டி ராஜா தரப்பினர், “கட்சிக்கு தொடர்பே இல்லாதவர் ஆட்டோ ராஜா. ஏதோ விளம்பரத்துக்கா செய்கிறார். அவரை, கட்சியில் உள்ள சிலர் பயன்படுத்திக்கொள்கிறார்கள்” என்கிறார்கள்.
புதிய கட்சி துவக்கவிழா, வீரபாண்டி ஆறுமுகம் பிறந்த, ஜன., 26ம் தேதி நடக்கிறது.
“ஜனவரி 30ம் தேதி அழகிரியின் பிறந்தநாள். அந்த சமயத்தில் அவரது ஆதரவாளர்கள் சாதாரணமாகவே கரகம் ஆடுவார்கள். பிறந்தநாள் நெருக்கத்தில் அழகிரி படம் போட்டு புதிய கட்சி என்றால் அலப்பறை செய்து தீர்த்துவிடுவார்கள்” என்கிறார்கள் நடுநிலை கட்சிக்கார்கள்.
ஆக, சுவாரஸ்யமான காட்சிகள் காத்திருக்கின்றன!
- சுந்தரம்