
முன்னாள் டி.ஜி.பி.யும் மயிலாப்பூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளருமான நட்ராஜ் ஐ.பி.எஸ். மீது, சரவணன் என்பவர் டி.ஜி.பி. அலுவலகத்தில் மோசடி புகார் அளித்திருக்கிறார்.
32 வயதான சரவணன், சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார். மனித உரிமை அமைப்பும் நடத்துகிறார்.
நாம் சரவணனிடம் பேசினோம். அவர், “இயக்குநர் ஷங்கரின் படத்தில் வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி நட்ராஜ் மற்றும் அவரது மகன் ரித்தீஷ் ஆகியோர் 28.50 லட்ச ரூபாயை என்னிடமிருந்து வாங்கிக்கொண்டார் நடராஜ். ஆனால் வாய்ப்பு வாங்கித்தரவில்லை. பணத்தை திருப்பிக்கேட்ட போது 7 லட்ச ரூபாய்க்கு செக் கொடுத்தார். ஆனால் வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் செக திரும்பிவிட்டது.
இது குறித்து நட்ராஜிடம் கேட்டபோது துப்பாக்கியை எடுத்துக்காட்டி, கொன்றுவிடுவேன் என்று மிரட்டினார். அவரது மனைவி நிர்மலா அரிவாள் மனையை எடுத்துக் கொண்டு வந்து குத்தி விடுவதாக மிரட்டினார். ஆகவேதான் டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்தேன்” என்றார்.
இது குறித்து நட்ராஜ் ஐ.பி.எஸ்ஸை தொடர்புகொண்டு கேட்டோம். அவர், “தற்போது எனக்கு அ.தி.மு.க. சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வேண்டுமென்றே இப்படி பொய்யான புகார்களை தெரிவிக்கிறார் அந்த நபர். அவர் ( சரவணன்) யார் என்றே எனக்குத் தெரியாது. அவரை நான் பார்த்ததே இல்லை.
ஏற்கெனவே என் மீது உயர்நீதி மன்றத்தில் பொய் வழக்கும் போட்டார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அது மட்டுமல்ல. என் மீத தவறான குற்றச்சாட்டை சுமத்தியதற்காக சரவணனை கோர்ட் கடுமையாக எச்சரித்தது” என்றவர், “அதிகாரம் மிக்க பணிகளில் இருந்திருக்கிறேன். ஆனால் அதிகார துஷ்பிரயோகம் செய்ததில்லை. என் மீது எந்த ஒரு புகாரும் கிடையாது. இதை வாழ்க்கை நெறியாகவே கடை பிடிக்கிறேன்” என்றார் நட்ராஜ் ஐ.பி.எஸ்.
Patrikai.com official YouTube Channel