d

பிரச்சாரத்துக்கு போறதா.. டிவியை கட்டி அழுவறதா?: புலம்பும் வேட்பாளர்கள்
 
இதுவரை இல்லாத  அளவு, அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை இந்த முறை மாற்றிக்கொண்டே இருக்கின்றன கட்சிகள்.
 
அதிகப்படியாக மாற்றம் நடந்துகொண்டிருப்பது வழக்கம் போல அ.தி.மு.க.வில்தான்.  இதுவரை 23 வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். 3 பேர் தொகுதி மாற்றப்பட்டுள்ளனர். ஒரு தொகுதி கூட்டணிக் கட்சிக்காக மாற்றிக் கொடுக்கப்பட்டதால் வேட்பாளரை திரும்பப்பெற்று வேறொரு ஒரு வேட்பாளர் அறிவிக்கப்பட்டார்.
 
இந்த மாறுதல்களுக்கு இதற்கு மற்ற கட்சிகளும் விதிவிலக்கல்ல. ஆச்சரியகரமாக தி.மு.கவிலேயே மாறுதல் நடந்தது.  ஏனென்றால் தி.மு.க.வில் வேட்பாளர் மாற்றம் என்பது அரிதான விசயம். ஆனால் இம்முறை மாற்றங்கள் நடந்தது. உதாரணமாக, புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் முதலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் டாக்டர் சதீஷ். ஆனால் இவர் மாற்றப்பட்டு மெய்யநாதன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
 
இதேபோல பா.மக.விலும் நடந்தது. உதாரணமாக  உளுந்தூர்பேட்டையில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் மாற்றப்பட்டு வழக்கறிஞர் பாலு அறிவிக்கப்பட்டார்.
 
நாம் தமிழர் கட்சியல் கூட வேட்பாளர் மாற்றப்பட்டிருக்கிறார். இத்தனைக்கும் சில மாதம் முன்னதாகவே  பெரும்பாலான தொகுதிகளுக்கு வேட்பாளாரை அறிவித்த கட்சி இது. அப்படி பல நாட்கள் முன்பே அறிவிக்கப்பட்டவர்தான் அக்கட்சியின் ஆலங்குடி தொகுதி வேட்பாளர் தமிழ்ச்செல்வி.  ஆனால் இவரும் திடுமென மாற்றப்பட்டார்.
 
இதனால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள்,  “நம்மையும் மாற்றி விடுவார்களோ” என்ற பயத்தில் இருக்கிறார்கள்.
 
ஆளுங்கட்சியைச் சேர்ந்த  வட மாவட்ட வேட்பாளரின் ஆதரவாளர்கள் நம்மிடம் புலம்பித்தள்ளிவிட்டனர்:
 
“கடுமையான போட்டிக்கிடையே, அண்ணன் (வேட்பாளர்) சீட் வாங்கிவிட்டார். இதுக்காக கடந்த ஐந்து வருடங்களாகவே திட்டமிட்டு செயல்பட்டு வந்தார். தொகுதியில் நடக்கும் நல்லது கெட்டதுகளுக்கு செல்வார். கோயில் அல்லது வேறு விழாக்களுக்கு நிதி உதவி செய்வார். கட்சிக் கூட்டங்கள் நடத்துவார்.
 
இப்படி நிறைய செலவு செய்தார். அதோடு, சீட் வாங்குவதற்கும் அவர் செய்த செலவு சொல்லிமாளாது. அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகும் பெரும் செலவு செய்து வருகிறது. அண்ணனுக்காக ஒரு படையே தொகுதி முழுக்க வேலை செய்கிறது. அவர்களுக்கு சாப்பாடு, போக்குவரத்து, மது பாட்டில்கள் மட்டுமல்ல… முழு நேரமாக உழைக்கும் தொண்டர்களுக்கு இரு மாதங்களுக்கான குடும்பத் தேவைக்கு பெரும் பணம் கொடுத்திருக்கிறார்.
இந்த நிலையில் திடுமென வேட்பாளரை மாற்றி விடுவார்களோ.. என்ற பயத்திலேயே காலத்தை கழிக்க வேண்டியிருக்கிறது” என்றார்.
அவர்களிடம் நாம், “அதுதான் வேட்புமனு தாக்கல் செய்து முடித்துவிட்டீர்களே..  இனி என்ன பயம்” என்றோம்.
“நாளை (29ம் தேதி) வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் அல்லவா. ஆகவே அதுவரையிலும் நிம்மதி இல்லை” என்றார் ஒருவர்.
பிரதான எதிர்க்கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் ஒருவரின் ஆதரவாளரோ, வேட்புமனுவை திரும்பப்பெற கடைசி நாளான மே 2ம் தேதி வரை நிம்மதி இல்லை..ஏனென்றால், திடுமென மாற்று வேட்பாளரே போட்டியிடட்டும் என்று தலைமை சொல்லிவிட்டால் என்ன செய்வது” என்றார் பதட்டத்துடன்.
ஆளுங்கட்சியைச் சேர்ந்த  தஞ்சை மாவட்ட வேட்பாளர் ஒருவர், “காசு பணம் போனா கூட பரவாயில்லீங்க… உயிரே போயிடுது. விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் தொகுதிக்கு  அ.தி.மு.க. சார்பாக ராஜசேகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.   இந்த நிலையில் திடீரென ராஜசேகரை நீக்கிவிட்டு அமைச்சர் மோகனை ஜெயலலிதா வேட்பாளராக நியமித்தார். . இந்த செய்தியைக் கேட்டு ராஜசேகரின் சித்தி ரத்தினாம்பாள் நெஞ்சடைத்து இறந்துபோனார். அண்ணன் முத்தையன்  ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதற்கு என்ன சொல்வது..” என்று நொந்துபேய் கேட்டார் அவர்.
சீனியரான சென்னை வேட்பாளர் ஒருவர், “முன்னால எல்லாம், ரிசல்ட் அன்னைக்குத்தான் திக் திக்னு இருக்கும். இப்போ ஒவ்வொரு நாளும், நாமதான் வேட்பாளரானு மனசு அடிச்சுக்குது. டிவியில “மாற்றம்”னு வார்த்தை வந்தாலே படக்குனு நெஞ்சு அடைக்குது” என்றார்.
அவங்க கஷ்டம், அவங்களுக்குத்தான் தெரியும்!