IMG_1525

 

ரோப்பியத் தமிழாய்வியல் மாநாடு ‘ ஐரோப்பாவில் தமிழ் ‘ எனும் தலைப்பில் அக்.10,11 ஆகிய தேதிகளில் பாரீசில் நடைபெற்றது.

ஜெர்மனி, இங்கிலாந்து, நோர்வே, பெல்ஜியம், செக் குடியரசு, ஹாங்காங், இந்தியா, மலேசியா, இலங்கை என பல நாடுகளிலிருந்து பல தமிழ் ஆய்வாளர்களும், தமிழ் ஆர்வலர்களும், பேராசியர்களும் இந்நிகழ்வில்  கலந்துக்கொண்டனர்.

பன்னாட்டு உயர் கல்வி மாணவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கப்பெற்ற இவ்விழாவில் இலங்கை – இந்திய தூதர் வாழ்த்துரையும், தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக துணை வேந்தர்  திரு.பாசுகரன் அவர்கள் தலைமை உரையும், செக் குடியரசினை சேர்ந்த தமிழ் ஆய்வாளர்  முனைவர். ஜரொஸ்லாவ் வசெக் அவர்கள் சிறப்புரையும் ஆற்றினர்.

பன்னாட்டு உயர் கலவி நிறுவனத்தின் இயக்குநர் , முனைவர்.சச்சிதானந்தம் அவர்கள் பொன்னாடை அணிவித்தார். நினைவுப் பரிசினை பிரான்ஸ் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் தசரதன் அவர்கள் வழங்கினார்.

ஜெர்மானிய லூதரன் மத போதகர்களின் தமிழ் பங்களிப்புகள் எனும் தலைப்பில் பேசிய ஜெர்மன் , தமிழ் மரபு அறக்கட்டளை , முனைவர்.சுபாஷிசினி ட்ரெம்மல்  அறிஞர்.சீகன்பால்கு , ஜி.யூ.போப் போன்றோரின் சீரிய தமிழ் தொண்டினை பற்றியும் , தமிழுக்கு தொண்டாற்றிட அவர்கள் சந்தித்த இன்னல்கள், எடுத்த பெரு முயற்சிகள் ஆகியன பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

தொடர்ந்து பேசிய பல தமிழறிஞர்கள் ஐரோப்பாவிலிருந்து தமிழுக்கு தொண்டாற்றியவர்களை பற்றியும், ஐரோப்பாவில் தமிழ் கூத்து மரபுகள் , ஐரோப்பியர்களின் தமிழ் தொண்டினை பற்றியும் தாங்கள் ஆய்வு செய்தனவற்றை எடுத்துரைத்தனர்.

தொல்காப்பியத்தை பற்றி ஆய்வு செய்யும் பிரெஞ்சு பேராசியரான ழான் லுய் செவல்லார்ட் அவர்கள் தொல்காப்பியத்தில் தான் ஆய்வு செய்தவைகளை பற்றி விளக்கி கூறினார்.

ஹாங்காங்கிலிருந்து வந்திருந்த பேராசியர் கிரகோரி ஜேம்ஸ் உலகப்போரில் தமிழர்களின் பங்கினைப் பற்றி தான் ஆய்வு செய்த அரிய விடயங்களை தெரிவித்தார்.  உலகப்போர்களில் தமிழர்களின் பங்கு, அவர்கள் குடியேறிய இடங்கள் ஆகியன குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

செக் குடியரசை சேர்ந்த சார்ள்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர், முனைவர். ஜரொஸ்லவ் வசேக் ‘ மங்கோலிய மொழியுடனான தமிழ் மொழியின் ஒற்றுமை மற்றும் தொடர்புகள் ‘ குறித்து பேசினார்.

மேலும் , முனைவர் அலெக்ஸிஸ் மார்க் தேவராஜ் , முனைவர் முருகன் உள்ளிட்ட பல ஆய்வறிஞர்கள் கலந்துக்கொண்டு , தாங்கள் தமிழ் மொழியினை குறித்து ஆய்வு செய்தனவற்றை பற்றி பேசினர்.

இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்வின் ஒவ்வொரு நாள் மாலையும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஐரோப்பிய தமிழ் பிள்ளைகள் நடனம் , தமிழரின் வீர விளையாட்டுகள் முதலியனவற்றில் தங்கள் திறமைகளை காட்டினர்.

திரு.சச்சிதானந்தம் ,  ப்ரான்ஸ் தமிழ் சங்கம் திரு. தசரதன் , திரு.கோகுலன் கருணாகரன் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

  • ஜே ரீ பார்ன்