திரைக்கு வராத திரையுலக உண்மைகள்: 11
கடந்த வாரம், ரஜினியுடனான தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்ட பிரபல புகைப்பட கலைஞர், ஸ்ரீராம் செல்வராஜ், இந்த வாரமும் தொடர்கிறார்:
“அந்தக்காலத்தில் ஒளிப்பதிவாளர் பாபு, ரொம்பவே பிரபலம். ரஜினியின் முரட்டுக்காளை, கமலின் சகலகலாவல்லவன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். சில இந்தி படங்களுக்கும் பணியாற்றியிருக்கிறார். அவரது தம்பி பெயர் பாபா. இவர் ஸ்டில் போட்டோகிராபர். இருவருமே ரஜினிக்கு நன்கு அறிமுகமானவர்கள்.
சகோதரர்களக்குள் ஏதோ மனஸ்தாபம். ஃபீல்டைவிட்டே ஒதுங்கி, போட்டோ ஸ்டூடியோ வைத்தார் பாபா.
1988 அல்லது 89ம் வருடம். பாபாவின் ஸ்டுடியோவில் நான் பணிக்கு சேர்ந்தேன். அப்போது பாபா மிகவும் சிரமமான சூழலில் இருந்தார். திருமணம் ஆன புதிது. வருமானம் போதுமானதாக இல்லாத நிலை.
அப்போது நக்கீரன் வார இதழ் குழுமத்திலிருந்து வெளியான “ரஜினி ரசிகன்” இதழ் மிகவும் பாப்புலர். ரஜினி தொடர்பான செய்திகளே, இதழ் முழுக்க நிறைந்திருக்கும். ரஜினியின் வித்தியாசமான புகைப்படங்கள் நிறைய இருக்கும். அவரது ரசிகர்கள் விரும்பிப்படித்த இதழ் அது.
நான், பாபாவிடம், “உங்களுக்குத்தான், ரஜினி நல்ல அறிமுகமாயிற்றே… ரஜினி ரசிகன் இதழுக்காக அவரது புகைப்படத்தை எடுத்துக்கொடுத்தால், நல்ல ஊதியம் கொடுப்பார், “நக்கீரன்” கோபால்” என்றேன்.
பாபாவோ, “ரஜினியுடன் நெருக்கமாக பழகியவன்தான் நான். ஆனால் சந்தர்பப் சூழலால் ஒதுங்கி நிற்கிறேன். அவரைப் பார்த்தே பல வருடம் ஆகிவிட்டது. இப்போது தொடர்பு இல்லையே.. என்னை நினைவில் வைத்திருப்பாரா.. வைத்திருந்தாலும், படம் எடுக்க நேரம் ஒதுக்குவாரா” என்று தயங்கினார்.
நான், “ஒரு முயற்சிதானே… செய்து பார்ப்போமே” என்று வற்புறுத்தினேன்.
கொஞ்சம் யோசனையோடே, பப்ளிக் பூத்தில் இருந்து ரஜினி வீட்டுக்கு போன் செய்தார் பாபா. அப்போது செல்போன் கிடையாது. லேண்ட் லைன் போன் என்பதும் பெரிய விசயம்.
போன் செய்தபோது, ரஜினியின் உதவியாளர் யாரோ எடுத்தார்கள். “சார் ஊரில் இல்லை. படப்பிடிப்புக்காக வெளியூர் சென்றிருக்கிறார்” என்றார்கள்.
“ரஜினி சாருடன் நெருங்கிப் பழகியவன். பெயர் பாபா. புகைப்படக்காரர். பத்திரிகைக்காக ரஜினி சாரை புகைப்படம் எடுக்க வேண்டும்” என்று சொன்னார் பாபா.
எதிர் முனையில் இருந்தவர், “ரஜினி சார் தினமும் இரவு போன் செய்வார். அப்போது சொல்கிறேன். நாளை நீங்கள் போன் செய்யுங்கள். தகவல் சொல்கிறேன்” என்றார்.
ஆனாலும் பாபாவுக்கு நம்பிக்கை இல்லை. ரஜினி பிஸியான நடிகர். மிகப்பிரலமானவர். தனது போனுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் இருக்கும் என்றே ஐயப்பட்டார்.
ஆனாலும் நான் மீண்டும் வற்புறுத்த, மறுநாள் ரஜினி வீட்டுக்கு போன் செய்தார். எதிர்முனையில் இருந்தவர், “ரஜினி சார் உங்களை மிகவும் விசாரித்தார். இப்போது நாட்டுக்கொரு நல்லவன் படத்துக்காக பெங்களூரில் இருக்கிறார். உங்களை அவசியம் வரச் சொன்னார்” என்று சொல்லி, படப்பிடிப்பு நடக்கும் இடத்தையும் சொன்னார்.
பாபவுக்கு இன்ப அதிர்ச்சி. இத்தனை காலம் கழித்தும் நினைவைத்து நலம் விசாரித்திருக்கிறாரே..!
உடனே, நக்கீரன் கோபால் அவர்களிடம் விசயத்தைச் சொன்னோம். அவரும் உற்சாகமாக, “ரஜினியின் ஸ்பெஷல் ஸ்டில்ஸா… உடனே பெங்களூர் சென்று எடுத்து வாருங்கள்!” என்று சொல்லி, சென்று வர பணம் கொடுத்தார்.
நானும், பாபாவும் பெங்களூர் கிளம்பிச் சென்று, படப்பிடிப்பு தளத்தை அடைந்தோம்.
அங்கிருந்தவர்களிடம் தகவல் சொல்லி, காத்திருந்தோம். ஷூட்டிங்கில் இருந்த ரஜினி, முடித்துவிட்டு வந்தார். உற்சாகமாய், பாபாவை கட்டிக்கொண்டார்.
“என்ன பாபா… நடுவுல ஆளைக்காணேமே.. என்ன ஆச்சி?” என்று படபடப்பாகவும், அக்கறையாகவும் விசாரித்தார்.
பாபா, தன் குடும்ச்சூழலை சொல்ல, “சொல்லு.. சொல்லு.. என்ன வேணும்..” என்றார் அதே படபட பேச்சில்.
பாபா, “உங்கள் ஸ்டில்ஸ்தான் வேணும்.. பத்திரிகைக்கு கொடுக்க” என்றார்.
“அதுக்கென்ன.. புடிச்சுக்கோ..” என்று சிரித்த ரஜினி, தனியாக நேரம் ஒதுக்கி, போஸ் கொடுத்தார்.
அப்போது மிகவும் எதிர்பார்ப்பில் இருந்த படம், “நாட்டுக்கொரு நல்லவன்”. அந்த படத்தின் காஸ்ட்யூம்களோடு ஸ்டில்ஸ் என்றால் அல்வா துண்டு போல அல்லவா?
ஆசை தீர எடுத்தோம். கொஞ்சமும் முகம் சுளிக்காமல், விதவிதமான போஸ் கொடுத்தார் ரஜினி.
இடையில் “ஷாட் ரெடி” என்று உதவியாளர் சொல்ல… “முடிச்சுட்டு வந்திடுறேன்.. மறுபடி எடுக்கலாம்! என்ன…” என்று சிரித்தபடியே சொன்னார் ரஜினி.
அதே போல ஷாட் இடைவேளைகளில் எங்களுக்கு நேரம் ஒதுக்கி போஸ் கொடுத்தார்.
அந்த எக்ஸ்ளூசிவ் படங்களை, ரஜினி ரசிகன் இதழுக்கு கொடுத்தோம். பாபாவுக்கு நல்ல தொகை கிடைத்து. அவரது உடனடி பிரச்சினைகள் தீர்ந்தன.
இதைத் தொடர்ந்து ரஜினியை அவ்வப்போது சந்தித்து வந்தார் பாபா.
காலம் ஓடியது.
பாபாவின் ஸ்டூடியோ அவ்வளவாக பிக்அப் ஆகவில்லை. பேச்சுவாக்கில் இதை தெரி்ந்துகொண்ட ரஜினி, “வெளிப்படையாக சொல்ல வேண்டியதுதானே…” என்று யோசித்தவர், “டக்”கென்று, “இனி ராகவேந்திரா கல்யாண மண்டப நிர்வாகத்தைப் பார்த்துக்கோ” என்று உத்தரவாகவே சொல்லிவிட்டார்.
பாபாவுக்கு ஆனந்த அதிர்ச்சி. மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார்.
சமீபத்தில் பாபாவின் மகளுக்கு திருமணம் நடந்தது. நடத்தி வைத்தவர் ரஜினி.
தன்னுடன் சில காலம் பழகியவர்களைக்கூட மறக்காதவர் ரஜினி. தன்னாலான அத்தனை உதவிகளையும் செய்வார். அதற்கு ஒரு உதாரணம் பாபா.”
(அடுத்த வெள்ளி…. சந்திப்போம்.)