நியூயார்க்
ஐ நா பொதுக்குழு கூட்டத்தில் மத்திய அமைச்சர் சுஷ்மா பாகிஸ்தான் பயங்கரவாதிகளை உருவாக்கி வெளிநாடுகளுக்கு அனுப்பி வருகிறது என கூறி உள்ளார்.
அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரில் ஐ நா சபையின் 72ஆவது பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் பாக் பிரதமர் உரையாற்றும் போது இந்தியா பயங்கரவாதத்துக்கு ஊக்கம் கொடுப்பதாகவும், மனித உரிமை அத்து மீறல்களை நிகழ்த்துவதாகவும் குற்றம் சாட்டி இருந்தார். அதற்கு சுஷ்மா ஸ்வராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நேற்று ஐ நா சபை பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றும் போது, “இந்தியா மீது தொடர்ந்து மறைமுகமாக பாக் போர் தொடுத்து வருகிறது. இந்தியாவை மனித உரிமையை மீறுகிறது எனச் சொல்லும் தகுதி பாகிஸ்தானுக்கு கிடையாது. ஒரு நாட்டின் அரசே பயங்கரவாதத்துக்கு துணை போகிறது என்றால் அது பாக் மட்டுமே.
பாக் தலைவர்கள் இந்தியா மீது குற்றம் குறை காண்பதை விடுத்து தங்கள் நாட்டின் நிகழ்வுகளை பார்ப்பதுதான் புத்திசாலித்தனம். இந்தியவும் பாகிஸ்தானும் அடுத்தடுத்த நாட்களில் சுதந்திரம் பெற்றும் கூட இந்தியா அளவுக்கு பாக் ஏன் முன்னேறவில்லை? முதலில் பாக் தன்னை சுய பரிசோதனை செய்துக் கொண்டால் உலக அள்வில் பயங்கர வாதிகளை உருவாக்கி பல வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வது பாகிஸ்தான் என்பதை அறிய முடியும்.
இந்தியா சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளில் பல்வேறு கட்சிகள் அரசுப் பொறுப்பேற்று திறம்பட ஆட்சி செய்து ஜனநாயக நாடு என்பஹ்டை நிரூபித்துள்ளது. ஒவ்வொரு அரசும் இந்திய முன்னேற்றத்துக்கு பாடு பட்டுள்ளன. பாகிஸ்தான் இந்தியாவுக்கும் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்த போதும் அது எங்கள் ஒற்றுமையால் முறியடிக்கப் பட்டது.
இந்தியா ஐஐடி, ஐஐஎம் மற்றும் பல தொழில் நுட்ப, அறிவியல் கல்வி நிலையங்களை உருவாக்கி உலகில் புகழ் பெற்றுள்ளது. ஆனால் பாகிஸ்தான் பயங்கரவாதிகளை உருவாக்கி உலகெங்கும் அனுப்பி வைப்பதில் புகழ் பெற்றுள்ளது. பாகிஸ்தான் உருவாக்கியவைகள் லஷ்கர் ஈ தொய்பா, ஜெய்ஷ் எ முகமது, ஹிஜ்புல் முஜாஹிதீன் ஹக்கானி போன்ற பயங்கரவாத குழுக்கள் மட்டுமே ஆகும். பயங்கரவாதிகளை உருவாக்க செலவிட்ட பணத்தை நாட்டு முன்னேற்றத்துக்கு செலவழித்திருக்கலாம்.” என சுஷ்மா உரையாற்றியுள்ளார்.
மேலும், ஐ நா வின் பல திட்டங்கள், அணு ஆயுத அச்சுறுத்தல் ஆகியவை குறித்தும் பேசி உள்ளார். சுஷ்மாவின் உரைக்கு பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். பாராட்டுதல்களுக்கு சுஷ்மா தனது நன்றியை தெரிவித்துள்ளார்.