காந்திநகர்
குஜராத் மாநிலத்தை சேர்ந்த 433 மீன்வர்களை பாகிஸ்தான் சிறையில் அடைத்துள்ளதாக சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநில சட்டப்பேரவையில் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் சிராஜ் கலாரியா பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குஜராத் மாநில மீனவர்கள் குறித்து கேள்வி கேட்டிருந்தார் அந்த கேள்விக்கு குஜராத் மாநில மீன்வளத்துறை அமைச்சர் புருஷோத்தம் சோலங்கி பதில் அளித்தார்.
தனது பதிலில் புருஷோத்தம் சோலங்கி, “ கடந்த 2018 ஆம் வருடம் டிசம்பர் 31 ஆம் தேதி நிலவரப்படி 433 குஜராத் மாநில மீனவர்கள் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே பிடிபட்டவர்களில் 2017 ஆம் வருடம் 510 பேரும் 2018 ஆம் வருடம் 177 பேரும் பாகிஸ்தான் அரசால் விடுவிக்கபட்டுள்ளனர்.” என தெரிவித்துள்ளார்.
மற்றொரு காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினரான பாபு வாஜாவின் கேள்விக்கு அமைச்சர் சோலங்கி, “பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குஜராத் மீன்வர்களின் குடும்பங்களுக்கு செலவுக்காக தினம் ரூ.150 வழங்கப்படுகிறது. கடந்த 2017 ஆம் வருடம் அரசு 344 குடும்பங்களுக்கு ரூ1.88 கோடியும் 2018 ஆம் வருடம் 307 குடும்பங்களுக்கு ரூ.1.71 கோடியும் வழங்கி உள்ளது” என பதில் அளித்தார்