பெஷாவர்:
பாகிஸ்தானில் பழமையான இந்து கோவில் ரகசியமாக இடிக்கும் பணி நடப்பதாக உள்ளூர்வாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானின் வட மேற்கில் உள்ள பெஷாவரின் பழைய மாவட்டத்தில் கரிம்புரா என்ற இடத்தில் இருந்த பழமைவாய்ந்த இந்து கோவில், புணரமைப்பு என்ற பெயரில் இடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 நாட்களாக இடிக்கும் பணி எவ்வித தங்கு தடையின்றி நடப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த கோவிலை இடிக்கும் பணி தொடங்கியிருப்பது குற்றச் செயலாகும். அந்த இடத்தில் வணிக வளாகம் கட்டுவதற்காக கோவில் இடிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
கோவிலை இடித்தது முதல் குற்றம். குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் வணிக வளாகம் கட்ட முயற்சிப்பது இரண்டாவது குற்றம். அரசு துறைகள் ஏன் மவுனமாக இருக்கின்றன. முஸ்லிம் அல்லாத இதர அறக்கட்டளை சொத்துக்களை பாதுகாக்கும் வாரியம் மற்றும் தொல்லியல் துறை ஆகியவை நடவடிக்கை எடுக்காதது ஆச்சர்யமாக உள்ளது.
இந்த குற்றச் செயலில் இவர்களுக்கும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதனால் உடனடியாக கோவில் இடிக்கும் பணியை நிறுத்தி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
கீழ் மட்டத்தில் உள்ள அரசு அதிகாரிகள், போலீசார், நில மாபியா கும்பல் கைகோர்த்துக் கொண்டு இத்தகைய செயல்களில் ஈடுபட்டு, புராதாண சின்னங்களை அழிக்கும் பணியில் ஈடுபடுவது பாகிஸ்தானில் வாடிக்கையான விஷயமாகிவிட்டதாம்.