புகை பிடிப்பதற்காக பள்ளியைவிட்டு வெளியே செல்லும் மாணவர்களை, பயங்கரவாதிகள் மூளைச் சலவை செய்து, தங்கள் பக்கம் இழுக்கும் அபாயம் இருப்பதால், பள்ளி வளாகத்திற்குள்ளேயே மாணவர்களை புகை பிடிக்க பெரும்பாலான பள்ளிகள் அனுமதி அளித்துள்ளன!
இந்தக் கூத்து நடப்பது பிரான்சில்!
பிரான்ஸில் புகைப் பழக்கத்தை குறைப்பதற்காக பல சட்ட திட்டங்களை உருவாக்கியுள்ளது அந்நாட்டு அரசு. குறிப்பாக பள்ளி வளாகத்தில் மாணவர்களை புகை பிடிக்க அனுமதிக்கும் பள்ளிகளுக்கு 135 யூரோ முதல் 750 யூரோ வரை அபராதம் விதிக்கப்பட்டுகிறது.
ஆகவே, புகை விவகாரத்தில் பள்ளிகள் கடுமையான கண்டிப்புடன் நடந்துகொண்டன. ஆகவே புகை பழக்கமுள்ள மாணவர்கள், பள்ளியைவிட்டு வெளியே சென்று புகைத்து வருவார்கள்.
இந்த நிலையில்தான் கடந்த நவம்பர் மாதம் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினார்கள். இதில் 130 பேர் பலியானார்கள். தொடர்ந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் நாடுமுழுதும் நிலவுகிறது.
இதற்கிடையே, , புகைப்பதற்காக பள்ளியைவிட்டு வெளியேறும் மாணவர்களை பயங்கரவாதிகள் தொடர்புகொண்டு மூளைச்சலவை செய்து தங்கள் பக்கம் இழுக்க முயற்சிக்கிறார்கள் என்று உளவுத்துறை சொல்ல.. பள்ளி நிர்வாகங்கள் ஆடிப்போய்விட்டன.
இப்போது, தங்கள் மாணவர்களை பள்ளி வளாகத்துக்குள்ளாகவே புகைபிடிக்க அனுமதிக்கின்றன. அதுமட்டுமல்ல.. புகை பிடிப்பவர்களுக்கான சட்ட திட்டங்களில் திருத்தம் வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கின்றன. ஆனால் இதை பிரான்ஸ் அரசு ஏற்க மறுத்துவிட்டது.” புகை பிடிப்பதை கட்டுப்படுத்தும் கொள்கையில் எந்த மாறுதலையும் கொண்டு வர முடியாது” என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சர் தெரிவித்துவிட்டார்.
பள்ளிகளின் செயலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். மாணவர்களை திருத்துவதைவிட்டுவிட்டு, புகைபிடிக்க அனுமதிப்பதா என்று அவர்கள் கொதிக்கிறார்கள். பிள்ளைகளை அடக்கி வைக்க வேண்டியதுதானே என்கிற ரீதியில் பள்ளி நிர்வாகங்கள் பதிலுக்கு குமுறுகின்றன.
பயங்கரவாதிகளைப்போலவே, உடலுக்குள் செல்லும் நிகோடின் புகையும் ஆபத்தானது என்பதை பிரான்ஸ் மாணவர்கள் உணர்ந்தால்தான் இதற்கு தீர்வு!