Abuse2

சீனாவில் கொண்டுவரப்பட இருக்கும் சட்டம் ஒன்று உலகைத் திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறது. இந்த சட்டத்தின் மூலம், ஆண்களும் பெண்கள் மீது பலாத்கார குற்றச்சாட்டு கூற முடியும். இதுவரை அப்படி ஒரு வாய்ப்பு ஆண்களுக்கு அங்கு இல்லை.

ஆண் அல்லது பெண் இருவரில் யார் பாலியல் குற்றங்களில் ஈடுப்பட்டாலும் அவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வழிவகை செய்கிறது இந்த சட்டம்.

“ இந்த சட்டத்தை இந்தியாவிலும் கொண்டுவர வேண்டும்” என்றும் சிலர் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

ar

இது குறித்து பெண்ணுரிமை போராளியும், வழக்கறிஞருமான அருள்மொழியிடம் கேட்டோம். அவர், “அப்படி ஒரு செய்தி அடிபட்டாலும், உறுதியான தகவலா என்று தெரியவில்லை. அது உண்மையாக இருந்தால் பெரும் தவறு. பெண்களால் ஆண்களை பலாத்காரப்படுத்த முடியுமா.. இது வரை அப்படி நடந்திருக்கிறதா? தவறாக கற்பிதம் செய்துகொண்டு இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வருகிறார்கள் என்றுதான் தோன்றுகிறது. சீனாவிலேயே இப்படி ஒரு சட்டம் தேவையில்லை என்று தோன்றுகிறது இந்த நிலையில், இந்தியாவில் தேவையே இல்லை. இங்கே பெண்கள்தான் பல வகையிலும் பாதிக்கப்படுகிறார்கள். பாலியல் ரீதியில்கூட” என்றவர், “சிறுவர்கள், பாதுகாப்பற்றவர்கள், பணத்துக்காக உடன்படும் ஆண்கள் சிலர் இப்படி பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அந்த மாதிரி கேஸ் எதுவும் எனக்கு கேஸ் வந்ததில்லை. எனக்குத் தெரிஞ்சும் இல்லை. ஆகவே இந்தியாவில் இதுபோன்ற சட்டம் தேவையே இல்லை” என்றார்.

அவரிடம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆண்மையை அகற்ற சட்டம் கொண்டுவர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளது குறித்தும் கேட்டோம்.

“ஆண்மையை எடுத்துவிட்டால் பாலுறவு ரீதியான எண்ணமே வராது என்று நினைத்து அவர் சொல்லியிருக்கலாம். ஆனால், அது தீர்வு கிடையாது. ஏனென்றால் ஒரு பெண் பாலியல் ரீதியாக பலாத்காரப்படுத்தப்படுவது, துன்புறுத்தப்டுவது என்பது ஆண்மை அல்லது ஆணுறுப்பால் மட்டும் என்று சொல்ல முடியாது.

ஆண்மையை நீக்கிவிட்டாலே பாலியல் வக்கிர எண்ணம் போய்விடும் என்று கூற முடியாது. இன்னும் சொல்லப்போனால் அதன் பிறகு, பெண்களை இன்னும் மோசமாக துன்புறுத்தும் சைக்கோவாக மாற வாய்ப்பு இருக்கிறது” என்றவர், “ பாலியல் குற்றவாளிகளுக்கு, நெற்றியிலயோ முகத்திலோ ஒரு நிரந்தர அடையாளத்தை பச்சை குத்திவிட வேண்டும். இதனால் அப்படிப்பட்டவனைப் பார்த்து மற்றவர்கள் குறிப்பாக குழந்தைகள் ஒதுங்கிவிடுவார்கள். குழந்தைகளின் பெற்றோரும் கூடுதல் எச்சரிக்கயோடு இருப்பார்கள்” என்றார்.

நல்ல யோசனையாகத்தான் படுகிறது. அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளுமா?