வாரணாசி
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடந்த தடியடியில், போலீசார் ஒரு ஆசிரியை தாக்கி உள்ளனர்.
கடந்த வாரம் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஒரு மாணவி பல்கலை வளாகத்தில் பாலியல் சீண்டலுக்கு ஆளானதை கண்டிக்காத நிர்வாகத்தை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து தீவைப்பு, தடியடி போன்ற கலவரங்கள் நிகழ்ந்துள்ளன. போலீஸ் நடத்திய இந்த தடியடியில் பல மாணவர்கள் மட்டுமின்றி சில ஆசிரியர்களும் காயம் அடைந்துள்ளனர்.
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் உள்ள மகளிர் கல்லூரியில் சமுகத் துறை ஆசிரியையாக பிரதிமா கோந்த் என்பவர் பணியாற்றி வருகிறார். அவரும் போலீசாரால் சரமாரியாக தாக்கப்பட்டுள்ளார். இது குறித்து அந்த ஆசிரியை, “சம்பவத்தின் போது நானும் அங்கு இருந்தேன். தடியடியின் போது ஒரு மாணவி கீழே விழுந்து விட்டார். நான் அவரைப் பிடித்து தூக்கி விட அருகில் சென்றேன். அங்குள்ள போலீசார் என்னையும் சூழ்ந்துக் கொண்டு தடியடி நடத்த துவங்கினர்.
நான் அவர்களிடம் நான் அதே பல்கலைக்கழகத்தில் பணி புரியும் ஆசிரியை எனக் கூறியும் கேட்காமல் என்னை இரண்டு மூன்று தடிகளைக் கொண்டு அடித்தனர். எனக்கு தலையிலும், விரல்களிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. போலீசார் எங்களை தாக்க நாங்கள் ஒன்றும் கிரிமினல்கள் இல்லை, ஆசிரியர்கள் தான். மேலும் நாங்கள் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை. ஆசிரியைகளுக்கும், மாணவிகளுக்கும் தடியடி நடக்கும் போது அங்கு ஒரே ஒரு பெண் போலீஸ் அதிகாரி கூட கிடையாது. இரவு 11.30 மணிக்கு எங்கள் மேல் தடியடி நடத்தப்பட்டது” என கூறி உள்ளார்.
அவர் பேட்டி அளித்த வீடியோ பதிவு வைரலாகி வருகிறது. பிரதிமா, தான் ஒரு ஆசிரியை எனக் கூறிய பிறகும் போலீசார் தடியடி நடத்தியதற்கு பலரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் இது குறித்து யோகி அரசு ஒரு விசாரணைக்கமிஷன் அமைத்துள்ளதாக தெரிவித்துள்ளது தெரிந்ததே.