ஜெய்ப்பூர்
பத்மாவதி பிரிட்டனில் திரையிடப்பட்டால் அந்த திரையரங்குகள் கொளுத்தப் படும் என ராஜ்புத் கார்ணி சேனா தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடும் சர்ச்சைகளைக் கிளப்பி வரும் பத்மாவதி இந்தித் திரைப்படம் வெளியிட பிரிட்டன் தணிக்கை வாரியம் அனுமதி அளித்துள்ளது. இது அந்தப் படத்தை எதிர்த்து வரும் இந்து அமைப்பினர் இடையே கடும் கொந்தளிப்பை உண்டாக்கி உள்ளது. ஏற்கனவே ராஜஸ்தானில் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவை ஆர்ப்பாட்டம் செய்து முடக்கிய ராஜ்புத் கார்ணி சேவாவின் தலைவர் சுக்தேவ் சிங் இது குறித்து ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர், “இந்தப் படம் பிரிட்டனில் திரையிடப் பட்டால் அந்த திரையரங்குகள் கொளுத்தப்படும். அங்குள்ள ராஜபுத்திரர்கள் அந்த வேலையை செய்து முடிப்பார்கள். விரைவில் சர்வதேச நீதிமன்றத்தை அணுகி இந்த திரைப்படத்தை உலகெங்கும் தடை செய்ய மனு அளிக்க உள்ளோம். நானே அங்கு நேரடியாக சென்று போராட்டம் நடத்த நினைத்தேன். ஆனால் இந்திய அரசு எனது பாஸ்போர்ட்டை முடக்கிவிட்டபடியால் எனது ராஜபுத்திர சகோதரர்களை போராட்டம் நடத்த வேண்டுகிறேன். ராணி பத்மாவதி வசித்த அரண்மனையை ஆலயமாக்க விரைவில் வேண்டுகோள் அளிக்க எண்ணியுள்ளோம்” எனக் கூறி உள்ளார்.