சமீபத்தில் பத்திரிகையாளர்களிடம் அநாகரீகமாக விஜயகாந்த் நடந்துகொண்டதும், அதற்கு பத்திரிகையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததும் தெரிந்த செய்திதான். விஜயகாந்துக்கு கண்டனம் தெரிவித்து அவரது வீட்டு முன் போராட்டம் நடத்திய பத்திரிகையாளர்களை, தே.மு.தி.க. எம்.எல்.ஏ. பார்த்தசாரதி தலைமையிலான தே.மு.தி.கவினர் தாக்கியதும், அவர் உட்பட உட்பட தே.மு.திகவினர் மீது வழக்கு பதியப்பட்டு தற்போது அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதும் அனைவரும் அறிந்த செய்தியே.
இந்த நிலையில், நாளை நடைபெறும் தே.மு.தி.க. பொதுக்குழு கூட்டம் பற்றி செய்தி சேகரிக்க, பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் மற்றும் புகைப்பட, ஒளிப்படகாரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்.
அவரது கட்சியின் தலைமைக்கழகம் சார்பாக இன்று ஊடகங்களுக்கு அனுப்பப்பட்ட தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
“தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரு கின்ற 9.1.2016 (சனிக்கிழமை) காலை 9 மணியளவில், பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர், புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள ஜே.கே.மகால் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்துக்கு மதியம் ஒரு மணிக்கு தங்கள் பத்திரிகை மற்றும் தெலைக்காட்சியில் இருந்து நிருபர்கள் மற்றும் புகைப்படக்காரர்கள் மற்றும் தெலைக்காட்சி நிருபர்கள், ஒளிப்பதிவாளர்கள் ஆகியோர்களை அனுப்பி வைத்து பொதுக்குழுவின் தீர்மான நகல் மற்றும் பொதுக்குழு கூட்டத்தின் செய்தியையும் வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் பத்திரிகையாளர்கள் சங்கங்கள், விஜயகாந்தின் அழைப்பை புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.