நெல்லை

நெல்லை மாவட்ட அணைகளின் நீர் மட்டம் இங்கு பெய்து வரும் தொடர்மழையால் வேகமாக உயர்ந்து வருகிறது.

தற்போது மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை பரவலாக சாரல் மழை பெய்தது. மாநகர பகுதியில் மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்ததால் ஆங்காங்கே மழை நீர் தேங்கின.

நேற்று முன்தினம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்ததால் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 115.35 அடியாக இருந்தது. எனவே நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கார் பருவத்திற்கான விவசாய பணிகள் மும்மரமாக நடந்து வருகிறது.

நேற்று தென்காசி மாவட்டம் கடனாநதி பகுதியில் 17 மில்லி மீட்டர், ராமநதி பகுதியில் 12 மில்லி மீட்டர், குண்டாறு பகுதியில் 10 மில்லி மீட்டர், அடவிநயினர் பகுதியில் 16 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் கடனாநதி அணை நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 4 அடி உயர்ந்து 63.10 அடியாக உள்ளது. ராமநதி அணையின் நீர்மட்டம் 3½ அடி உயர்ந்து 62½ அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 127 அடியாகவும் உள்ளது