Tamil_News_large_132988620150830002712
ரண்டு நாள் முன்னதாக தோழமைக்குடும்ப திருமண வரவேற்புக்குச் சென்றுவிட்டு இரவு கால் டாக்சியில் திரும்பிக் கொண்டிருந்தோம். கிண்டி வரும்போது போக்குவரத்து நெரிசல். அப்போதுதான் ஓட்டுநருடன் உரையாடல் தொடங்கியது. ஒரு கட்டத்தில் மது விலக்கு பற்றியும் திரும்பியது. துணைவியார் மது விலக்கை தீவிரமாக வலியுறுத்தி கருத்துகளைக் கூறிக்கொண்டிருந்தார்.
அப்போது ,’மேடம் இப்ப 10, 20 வருசமாத்தான் டிரக் குறைஞ்சிருக்கு. கஞ்சா முதல் வல்கனைசிங் சொலியுசன் வரை உடம்பக் கெடுத்துக்கிட்டிருந்தது. காணாததுக்கு கள்ளச்சாராயம் வேற. இதெல்லாம் திரும்ப வரணும்னு நெனைக்கீங்களா’ என்றார்.
அவர் அமைதியாகவும் நிதானமாகவும் முக்கியமாக துல்லியமான சொற்களாலும் பேசிக்கொண்டிருந்தார். அவர் சொன்ன டிரக் விவகாரம் எங்களுக்கு உண்மையிலேயே அதிர்ச்சியாக இருந்தாலும் நான் ஆச்சரியப்பட்டது என்ன வென்றால் அவர் அமைதியாகவும் அழகாகவும் பேசியது:
“சார், எதையும் தடை நிறுத்த முடியாது சார். இப்ப டாக்சியில போறீங்க. பிரேக் டவுண் ஆகுது. அப்ப என்ன நினைப்பீங்க. உடனே ஒரு ஆல்டர்நேடிவ் தேடுவீங்க. முதல்ல ஒரு கால் டாக்சி, அடுத்து ஆட்டோ, அதுவும் கிடக்கலைன்னா லிப்ட் கேட்டுப் பாக்கலாம்னு நினைப்பீங்க, அப்புறம் பஸ்ஸுலயாவது போயிரலாம்னு நெனைப்பீங்க இல்லியா’ என்றார்.
உண்மையிலேயே யோசிக்க வேண்டிய கருத்தை சர்வ சாதாரணமாகக் கூறுகிறார். இவர்களையெல்லாம் ‘டிரைவர்தானே’ என எவ்வளவு கீழிறக்கம் செய்து விடுகிறோம் என்பதை நினைக்கையில் குற்ற உணர்ச்சியாக இருந்தது.
அவருக்கு 40 – 45 வயது கூட இருக்காது. ராணுவத்தில் பூஞ்ச் பகுதியில் பணியாற்றியிருக்கிறார். பின்னர் இந்தியாவில் பல பாகங்களில் பயணித்துள்ளார். அந்த அளவுக்கு அவரது பார்வையும் விரிவடைந்ததாக இருந்தது.
Appanasamy Apps  (முகநூல் பதிவு)