parliant
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளத்தை இரட்டிப்பாக்க நாடாளுமன்ற விவகாரத்துறை பரிந்துரை செய்துள்ளது. நடந்து முடிந்த குளிர்கால கூட்டத்தொடரில் எம்.பிக்கள் செயல்பாடு ஆக்கப்பூர்வமாக இல்லை என்று விமர்சனம் எழுந்துள்ள நிலையிலும், சம்பள உயர்வு பரிந்துரைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது எம்.பிக்களின் மாத சம்பளம் ரூ.50 ஆயிரம் ரூபாயாக உள்ளது. இதை ரூ.1 லட்சமாக உயர்த்தவும், தொகுதி அலோவன்ஸ் தொகையை ரூ.45 ஆயிரத்தில் இருந்து ரூ.90 ஆயிரமாக உயர்த்தவும், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் நிதித்துறைக்கு சிபாரிசு செய்துள்ளது. இதை நிதித்துறை ஏற்றுக்கொண்டுள்ளது.
பெரும்பாலான எம்.பிக்கள் தங்களுக்கு சம்பள உயர்வுக்கு பதிலாக, அலவன்ஸ் தொகையை உயர்த்திக் கேட்கிறார்களாம். ஏனென்றால்,  சம்பளத்தில் உயர்வு ஏற்பட்டால் உயர் வருமான வரி பிரிவில் தாங்கள் சேர வேண்டிவரும், அலவன்ஸ் உயர்ந்தால் அந்த பிரச்சினை இல்லை.
கடைசியாக 2010ம் ஆண்டில் சம்பளம் உயர்த்தப்பட்டிருந்தது. லோக்சபா அல்லது ராஜ்யசபாவை நடத்த ஒரு நிமிடத்திற்கு ரூ.29 ஆயிரம் செலவாகிறது. ராஜ்யசபாவில் விரையமாக்கப்பட்ட நேரத்தால், சுமார் ரூ.10 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சமீபத்தில் ஒரு தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையிலும், சம்பள உயர்வுக்கு அனைத்து எம்.பிக்களும் கட்சி வேற்றுமையின்றி முயற்சி நடத்தியுள்ளது
மக்கள் பிரச்சினைகளில் ஒன்றுபட்டு நிற்கிறார்களோ இல்லையோ.. சம்பள விவகராத்தில் ஒரு சேர குரல் கொடுக்கிறார்கள்!
 

  • கே. மதிவாணன்