பாலன் எழுதிய “சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம” நூல் குறித்து பாரதிநாதன் பார்வை. இவர் “தறி”, “வந்தேறிகள”; நால்களின் ஆசிரியர்.
“ஈழத்தமிழர் படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்கிற குரல் எழுந்திருக்கும் இந்த நேரத்தில் தமிழகத்தில் இருக்கும் சிறப்புமுகாம்கள் எந்தளவு கொடுமைகள் நிறைந்ததாய் இருக்கின்றன என்பதை தோலுரித்துக் காட்டுகிறது இந்த புத்தகம்.
எதையும் காதால் கேட்டு பதிவு செய்வதைவிட அதை அனுபவித்த ஒருவரால் எழுதப்படும் நூல்கள் நம்மை வலிமிகுந்ததாய் செய்து விடுகின்றன. அப்படி தமிழகத்தில் பல்வேறு இன்னல்களைச் சிறப்புமுகாமில் அனுபவித்த தோழர் பாலன் இந்த புத்தகத்தில் தன்னுடையதும் சக ஈழ அகதிகளுடையதுமான வேதனைகளை மிகச் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார்.
இந்த புத்தகத்தை எழுதிய காரணத்தை தோழர் கூறுகிறார் “எட்டு வருட சிறைவாழ்க்கையை முடித்தக்கொண்டு மேலூர் சிறப்புமுகாமில் இருந்து நான் 30.04.1998 யன்று அங்கு அடைக்கப்பட்டிருக்கும் சக கைதிகளிடம் விடைபெறும்போது என் கைகளைப் பற்றிக்கொண்ட எட்டு வயது சிறுமி ஒருத்தி ” எல்லோரும் விடைபெறும்போது கவலைப்படாதே உன்னை விரைவில் விடுதலை செய்ய உதவுவேன் என்பார்கள். ஆனால் அது என்னை ஆறுதல்படுத்த அவர்கள் கூறும் வார்த்தை என்பதை நான் அறிவேன். ஆனால் நீங்கள் அவ்வாறு கூறாவிட்டாலும் நிச்சயம் எனக்கு உதவுவீர்கள் என்று நம்புகிறேன் ” என்று அவள் கூறிய அந்த வரிகள் இன்னும் என் காதில் ஒலித்தக்கொண்டு இருக்கிறது. தற்போது அந்த சிறுமி விடுதலையாகிவிட்டாள் என்றாலும் அந்த சிறுமி என்மீது வைத்த நம்பிக்கையின்படி என்னால் இயன்றளவு சிறப்புமுகாம் அகதிகளின் விடுதலைக்கு குரல் கொடுத்து வருகிறேன்”. அந்த அவரது குரல் அழுத்தமாய் இந்த புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழ அகதிகள் எப்படியெல்லாம் துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதை கண்முன் கொண்டுவந்து ஆதாரங்களோடு பதிவு செய்திருக்கிறார் தோழர் பாலன். குறிப்பாய் ஈழ அகதிப் பெண்கள் பாலுறவு வன்கொடுமைகளுக்கு ஆளாவதைச் சொல்லும்போது இதைப் பற்றியெல்லாம் ஈழ மக்களுக்காக குரல் கொடுப்பதாய் பேசுபவர்கள் ஏன் கண்டு கொள்ளவில்லை? என்ற கேள்வி எழுகிறது. அதிலும் அந்த பெண்களை மருத்துவமனைக்கு கூட்டிச் செல்வதாய் வெளியே கொண்டுபோய் தங்கும் விடுதிகளில் பொலிசார் வன்புணர்வு செய்வதும், அதை யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டுவதும் கொடுமையிலும் கொடுமை. மனித நேயமிக்க சில வழக்கறிஞர்கள் இதை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றும் பயனேதும் இல்லை என தெரியவரும்போது அதிர்ச்சி அடைய நேரிடுகிறது.
உண்ண உணவின்றி இருப்பதைக் காட்டிலும் எதையும் படிக்ககூட அனுமதிக்காத அதிகாரிகளின் செயலை தோழர் பாலன் சொல்லும்போது அவருடைய வேதனையை நாமும் உணர்கிறோம். சிறப்புமுகாமில் அதன் கூண்டு 24 மணி நேரமும் மூடப்பட்டுத்தான் இருக்கும். சாப்பாட்டு வேளையில்தான் மிகக்குறைந்தளவு நேரம் திறந்து விடுவார்கள். மொத்தத்தில் விலங்குகள் போலத்தான் எம்மை நடத்தினார்கள் என்கிறார் தோழர் பாலன்.
இத்தனைக்கும் இந்த முகாமில் உள்ளவர்கள் எந்த தவறும் செய்யாதவர்கள். ஆனால் எப்போது விடுதலை என்று அறியாதவர்கள். வழக்கு இல்லை, விடுதலையும் இல்லை எனும்போது இந்த அவலத்தை யாரிடம் சொல்ல? அதனாலேயே மனநோயாளிகளாய் மாறிப்போனவர்கள் கணக்கில் அடங்காதவர்கள் என்கிறார் தோழர் பாலன்.
நம் தொப்பள்கொடி உறவு என சொல்லப்படும் ஈழத் தமிழர்கள் இந்த கொடுமையை அனுபவிப்பது இலங்கையிலோ அல்லது வேறு எதோ தூர தேசத்திலோ அல்ல. வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என சொல்லப்படும் இங்கேதான்.
30 ஆண்டுகளுக்கு மேலாய் இன்றும் மூடப்படாமல் இருக்கும் சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாமை இந்த நூல் நமக்கு அடையாளப் படுத்தியிருக்கிறது என்றால் அது மிகையல்ல.”