சென்னை:
தமிழக நீர் நிலைகளில் உள்ள ஆக்ரமிப்பை அகற்ற வலியுறுத்தி சேலம் குடிமக்கள் அமைப்பு சார்பில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது. சேலத்தில் தொடங்கிய 20 பேர் கொண்ட இந்த பேரணி 400 கிலோமீட்டர் பயணத்துடன் சென்னையில் நிறைவு பெற்றது.
சென்னை பிரஸ் கிளப்பில் அந்த அமைப்பை சேர்ந்த பியூஷ் மனுஷ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வெள்ள பாதிப்புக்கு காரணம் நீர் நிலைகளில் உள்ள ஆக்ரமிப்புகள் தான். கடுமையான வெள்ள பாதிப்புக்கு பின்னரும் ஒரு இஞ்ச் நிலத்தை கூட கைப்பற்ற அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
பயணத்தின் போது திருப்பத்தூரில் நீர்நிலைகள் புறக்கணிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. ஆம்பூரில் தொழிற்சாலை மாசு பெரிய பிரச்னையாக உள்ளது.
வேலூரில் ஆக்ரமிப்பும், பெரும்பாலான பகுதிகளில் சீமை கருவேல் மரங்கள் மண்டி கிடப்பதை காண முடிந்தது. அனைத்து வடிகால்களும் மூடப்பட்டு, சாலை அமைக்கும் பணியின் போது சிறு குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், தர்மபுரி, வேலூர் கலெக்டர் அலுவலக அதிகாரிகளை நேரில் சந்தித்து ஆக்ரமிப்புகளை அகற்றுமாறு கேட்டுக் கொண்டோம்.
ஆனால், அவர்கள் யாரும் இதில் அக்கறை காட்டவில்லை. பயணத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், மாநில அரசிடம் இருந்து தான் எவ்வித பிரதிபலிப்பும் இல்லை. மாநில அரசு தங்களது தவறுகளில் இருந்து இன்னும் பாடம் கற்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
‘‘மாரி அம்மா உத்தரவுப்படி தான் நாங்கள் இந்த பேரணியை கடந்த 2ம் தேதி தொடங்கி நடத்தினோம். எனது வீட்டை நீங்கள் சுத்தம் செய்யவில்லை என்றால் நான் உங்கள் வீட்டில் நுழைவேன் என்று மாரி அம்மா உணர்த்திவிடடாள். அதனால் பொது நலன் கருதி அரசு உடனடியாக செயல்பட வேண்டும்’’ என்றனர். மாரி என்பதை மழை என்று இவர்கள் குறிப்பிடுகின்றனர்.
பேரணிக்கு கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதனால் பேரணியை கன்னியாகுமரி வரை தொடர முடிவு செய்துள்ளது.