புதுடெல்லி:
அலோக் வர்மாவை மத்திய புலனாய்வுத் துறையின் (சிபிஐ) இயக்குனராக தொடர்ந்து செயல்பட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதன் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது என அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராகுல்காந்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ரபேல் விமான பேரத்தை விசாரிக்க இருந்த சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா நள்ளிரவில் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவரை மீண்டும் சிபிஐ இயக்குனராக பணியாற்ற உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது.
ரபேல் போர் விமான முறைகேட்டில் பிரதமர் நரேந்திர மோடியை யாராலும் காப்பாற்ற முடியாது. ரபேல் விமானம் வாங்க ஏற்கெனவே போடப்பட்ட ஒப்பந்தத்தை மோடி மீறும்போது பாதுகாப்புத் துறை ஆட்சேபம் தெரிவித்ததா? என்பதை அறிய விரும்புகின்றேன்.
ரபேல் முறைகேடு நடந்தது உண்மை. இதில் மோடி பணம் பார்த்ததும், தன் நண்பர்களுக்கு கொடுத்ததும் நூறு சதவீதம் உண்மை என்றார்.
இது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் கூறும்போது, ரபேல் பேரம் குறித்து விசாரிக்க முயன்றதாலேயே அலோக் வர்மா விடுப்பில் அனுப்பப்பட்டார். உச்சநீதிமன்ற உத்தரவு வர்மாவுக்கு கிடைத்த பாதி வெற்றி. முழு அதிகாரத்துடன் அவரை மீண்டும் பணியாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரிக்கும் தேர்வுக் குழு முடிவு வெளிவரும் வரை, முக்கிய முடிவுகள் ஏதும் வர்மா எடுக்க வேண்டாம் என்று நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது என்றார்.