டில்லி:
கீழமை நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளை அகில இந்திய அளவிலான நுழைவு தேர்வு மூலம் நியமனம் செய்யவேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கீழமை நீதிமன்றங்களுக்கு மையப்படுத்தப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் நீதிபதிகள் நியமனம் செய்ய வேண்டும் என்ற உச்சநீதிமன்ற திட்ட அறிக்கையை மேற்கு வங்க அரசு மற்றும் கல்கத்தா உயர்நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்தது.
இது தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர், நீதிபதிகள் கோயல், கான்வில்கர் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘‘ கீழமை நீதிமன்றங்களுக்கு அகில இந்திய அளவில் நுழைவு தேர்வு நடத்துவதன் மூலம் நீதிபதிகள் நியமனம் தாமதமின்றி நடைபெறும். இதன் மூலம் திறன் மிக்க நீதித்துறை உருவாக்க வாய்ப்பு ஏற்படும். இந்த மையப்படுத்தப்பட்ட திட்டத்தால் நாட்டிற்கு பயனுள்ளதாக இருக்கும்.
நீதிபதிகள் நியமனம் தொடர்பாக சில மாநிலங்கள் மற்றும் உயர்நீதிமன்றங்கள் இடையே உள்ள பிரச்னை க்கு இதன் மூலம் நல்ல தீர்வு கிடைக்கும். நாங்கள் இந்த தேசத்திற்கு சேவை செய்ய விரும்புகிறோம். நாட்டில் இந்த நடைமுறை தற்போது அவசியமான ஒன்று.
நாட்டில் நீதித்துறை திறன் மிக்க வகையில் இல்லை என்றால் எந்த செயல்பாடும் இருக்காது. நாட்டில் முதலீடு செய்ய வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முன் வர மாட்டார்கள். அதனால் நாம் சிறந்த முறையில் முன்னோக்கி அடி எடுத்து வைக்க வேண்டும்’’ என்றனர்.
முன்னதாக ஒற்றை சாளர முறையில் நீதிபதிகள் நியமன தேர்வு நடைபெற வேண்டும் என்று மத்திய அரசு கடிதம் எழுதியிருந்தது. நீட் போன்ற பொதுத் தேர்வு மூலம் இப்பிரச்னைக்கு தீர்வு கண்டு பல மாநிலங்களில் காலியாக உள்ள சார்பு நீதிபதிகள் பணியிடங்களை நிரப்ப உச்சநீதிமன்றம் ஆய்வு மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு ஜூன் 30ம் தேதி வரை நாடு முழுவதும் மாவட்ட மற்றும் சார்பு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 21 ஆயிரத்த 320 ஆகும். இதில் 16 ஆயிரத்து 383 இடங்கள் நிரப்பபட்டுள்ளது. 4 ஆயிரத்து 937 பணியிடங்கள் காலியாக உள்ளது. நீதிபதிகள் பணியிடம் காலியாக இருப்பதால் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.