t

தொட்டியம்:

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே, நிலவேம்பு கசாயத்துக்கு பதில், கொசு மருந்து கொடுக்கப்பட்டதால் பல பெண்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே  தோளுர்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஜெ.ஜெ.நகரில்  நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் சாலை பராமரிப்பு பணி நடந்து வருகிறது.

இந்த பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபட்டுள்ளனர். நேற்று இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் குளிர்பான பாட்டிலில் எடுத்துச்செல்லப்பட்ட நிலவேம்பு கசாயம் அளிக்கப்பட்டது.

இதைக் குடித்த பலருக்கு நெஞ்சு எரிச்சலும், வாந்தி மயக்கமும் ஏற்பட்டது.   குறிப்பாக பாலசமுத்திரத்தை சேர்ந்த உமா (28), சாரதாம்பாள் (53), வசந்தா (48), நவமணி (40), மீனாட்சி (60) உட்பட 12 பேர் பெரிய அளவில் பாதிக்கப்பட்டார்கள்.

இவர்கள் அனைவரும் உடனடியாக  தொட்டியம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். .பிறகு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் நடந்த விசாரணையில், நிலவேம்பு கசாயத்துக்கு பதிலாக கொசு மருந்து கொடுக்கப்பட்டது தெரியவந்தது.  ஊராட்சி அலுவலகத்தில் நிலவேம்பு கசாயம் வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகிலேயே கொசு மருந்தும் இருந்துள்ளது. நிலவேம்பு என நினைத்து கொசு மருந்தை தவறுதலாக கலந்து கொடுத்துள்ளார்கள்.

இந்த  திருச்சி மாவட்டத்தில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.