e

சென்னை:

மந்திரித்து கொடுக்கப்பட்ட கைக்கடிகாரம் அணிந்திருப்பதாக தன்னைப்பற்றி தினமலரில் வந்த செய்தி உண்மையல்ல என்றும் அந்த செய்தியை அளித்த நிருபர் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தினமலர் நாளிதழில், “தி.மு.க., தலைவர் கருணாநிதி, தன் இடது கையில், ஒரு வாரமாக, சிவப்பு பட்டையுடன் கூடிய கைக்கடிகாரத்துடன், ஆந்திரா மாநில தர்காவில் இருந்து வந்த மந்திரிக்கப்பட்ட சிவப்பு கயிறையும் சேர்த்து கட்டியது, மன ரீதியாக உற்சாகத்தை அளித்துள்ளதால், அவருக்கும் கடவுள் நம்பிக்கை வந்து விட்டது என்றே, தி.மு.க., வட்டாரங்கள் கூறுகிறார்கள்” என்று செய்தி வெளியானது.

இதை மறுத்து இன்று கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்:

அதில் அவர் கூறியுள்ளதாவது: “தினமலர்” புளுகுகளில் இதுவும் ஒன்று!
என் கையில் எந்தக் சிவப்பு கயிறும் கிடையாது. கையிலே உள்ள சிவப்பு நிறப் பட்டையுடன் கூடிய கைக்கடிகாரம் நான் ஓராண்டிற்கு மேலாக கையிலே அணிந்திருக்கும் அதே கடிகாரம் தான்!

“தினமலர்” ஆசிரியர், திரு. கிருஷ்ணமூர்த்திக்குத் தெரியாமல் இப்படிப்பட்ட செய்தி வெளி வந்திருக்காது என நினைக்கிறேன். “நமது நிருபர்” என்ற பெயரால் இப்படிப்பட்ட “தப்பிலித்தனமாக” செய்திகளை வெளியிடுவோர் மீது இனியாது “தினமலர்” ஆசிரியர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்.” – இவ்வாறு தனது அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

அதே நேரம், “இதுபோன்ற செய்திகள் வருவதற்கு கருணாநிதிதான் காரணம்” என்று, இன்றும் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள்.

“கருணாநிதி தன்னை பகுத்தறிவுவாதி, பெரியாரிடம் நேரடியாக பாடம் பயின்றவர் என்றெல்லாம் சொல்லிக்கொள்கிறார்.   மறைந்த தி.மு.க. பிரமுகர் அன்பில் பொய்யாமொழி இல்ல திருமணத்தில், மணவிழா இல்லத்தினரின் வேண்டுகோள்படி மு.க. ஸ்டாலின் பட்டு வேட்டி, சட்டை அணிந்து கலந்துகொண்டார். ஆனால் கருணாநிதி அதே திருமண மேடையில், “நாம் திராவிட கொள்கையில் தோய்ந்தவர்கள். எக்காரணம் கொண்டும் நம் கரை, அடையாளங்களை மாற்றக் கூடாது’ என, பட்டு வேட்டி, சட்டைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

தி.மு.க எம்.பியாக இருந்த சிவசங்கர், தனது நெற்றியில் குங்குகும் இட்டிருந்ததை, “நெத்தியில ரத்தமா” என்று கிண்டலடித்தார். இது போல பல நிகழ்வுகளைச் சொல்லலாம்.

ஆனால் ஆரம்பம் முதல் கறுப்பு துண்டு அணிந்துவந்த கருணாநிதி திடுமென மஞ்சள் துண்டு அணிய ஆரம்பித்தார். குருபகவான் (ஜோதிட நம்பிக்கையுள்ளோரின் ஐதீக கடவுள்) அருள் பெறவே மஞ்சள்துண்டுக்கு மாறினார் என்று பல தரப்பினரும் பேச ஆரம்பித்தனர்.

ஆனால், “கழுத்து பகுதியில் அதிக வலி ஏற்படுவதால், கனமான மஞ்சள் துண்டு அணிந்தால் கழுத்து பகுதியில் வெப்பம் ஏற்படும். வலியை அது கட்டுப்படுத்தும் என, மருத்துவர்கள் ஆலோசனைப்படி துண்டு மாற்றம் நடந்தது’ என கூறப்பட்டது.

இது மருத்துவ ரீதியில் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியதா நிலையில், “ஒரு அடையாளத்துக்காக மஞ்சள் துண்டு அணிகிறேன்” என்றார் கருணாநிதி.

இப்படி பல காரணங்கள் சொல்லப்பட்டாதால், ஜாதக காரணமே உண்மை என நம்பப்படுகிறது. “கருணாநிதி ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசியில் பிறந்ததால், குருபலம் பெற அவர் மஞ்சள் துண்டு அணிந்தார்’ என்று ஜோதிடர்கள் கூறி வந்தனர்.

அதற்கேற்றபடி கருணாநிதியின் குடும்பத்தினர் பல்வேறு பரிகாரஸ்தலங்களுக்கு சென்று யாகம், அர்ச்சனை என நடத்தி வந்தனர்.

இடையில் மஞ்சள் துண்டிலிருந்து வெள்ளைக்கு அவ்வப்போது மாறினார் கருணாநிதி.

“குருபெயர்ச்சி சாதகமில்லாமல் போனதால், மஞ்சள் நிறத்தில் இருந்து, அடிக்கடி வெள்ளை துண்டுக்கு மாறி வருகிறார்” என்று சொல்லப்பட்டது.

அவர் முதல்வராக இருந்தபோது, தஞ்சை பெரிய கோயிலில் நடந்த நிகழ்ச்சியைக்காண பட்டு, வேட்டி சட்டை உடுத்தி வந்தார் கருணாநிதி.

ஆமாம்.. ஸ்டாலினை பட்டுவேட்டிக்காக கடிந்துகொண்ட அதே கருணாநிதிதான்!

பெரிய கோயிலுக்கு வந்தால் பதவி பறிபோகும், பல்வேறு துன்பம் நிகழும் என்று சொல்லப்படுவது உண்டு. இதையடுத்துதான் கருணாநிதி பட்டாடை கட்டி வந்தார் என்று சொல்லப்பட்டது.

பெரியாரிடம் நேரடி பாடம் படித்தாக சொல்லிக்கொள்ளும் கருணாநிதியின் இது போன்ற நடவடிக்கைகள் ஆச்சரியத்தை அளித்தன. பிறகு பழகிப்போயின.

இந்த நிலையில்தான் “மந்திரத்தி கயிறு மற்றும் கடிகாரம்” போன்ற விவகாரங்கள் கிளம்புகின்றன”  என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.