மறைந்த முன்னோர்களின் ஆசி நமக்கு என்றென்றும் தேவை என்பது ஐதீகம். அதனால் தான் முன்னோர்களை திருப்தி செய்ய ஒவ்வொரு அமாவாசை அன்றும் தர்ப்பணமும், மற்றும் அவர்களின் இறந்த தினத்தன்று திதி கொடுப்பதும் செய்து வரப்படுகிறது. அமாவாசை மாதா மாதம் வந்தாலும் ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை ஆகிய மூன்றும் தர்ப்பணம் செய்ய மற்றும் திதி கொடுக்க மிகவும் உகந்த நாட்களாகும். இந்த மூன்றிலும் மகாளய அமாவாசை எனப்படும் தை அமாவாசை மிக உயர்ந்த தினமாகும்.
மகாளயம் என்பது ஆவணி மாத பவுர்ணமிக்கு அடுத்த நாள் முதல் புரட்டாசி அமாவாசைக்கு முதல் நாள் வரை வரும் இரு வார காலம் ஆகும். அந்த நாட்களில் முன்னோர் மறைந்த திதி அன்று தர்ப்பணம், திதி கொடுத்தல் ஆகியவை செய்வது மிகவும் நல்லது. இந்த மகாளய பட்சத்தில் முன்னோர்கள் பூவுலகில் சஞ்சரிப்பதாக ஐதீகம் உள்ளது. அதனால் அந்த நாட்களில் திதி கொடுப்பது அவசியம்.
அப்படி திதி கொடுக்க முடியாதவர்கள் மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் செய்து திதி கொடுக்கலாம். முடிந்தால் ஏதேனும் புனித நதியில் நீராடி முன்னோர் கடமையை முடிப்பது நல்லது. மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் செய்ய உகந்த புண்ணிய தலங்கள் கங்கை நதிக்கரை, ராமேஸ்வரம், பம்பை நதிக்கரை மற்றும் பல இடங்கள். முடியாதவர்கள் உள்ளூரில் உள்ள இடங்களிலும் மூத்தோர் கடமைகளை முடிக்கலாம்.
அவரவர் வசதிக்கேற்ப ஏழைகளுக்கு முடிந்த உதவியை செய்வது மிகவும் நல்லதாகும். மற்றவை உங்கள் வீட்டு வழக்கப்படி செய்யலாம்.