டந்த 17ம் தேதி சென்னை எத்திராஜ் கல்லூரியில் வெள்ள மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களுக்கான நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி, நடந்தது. இளையராஜா பீப் விவகாரத்தால் அன்று நடந்த முக்கிய விசயம் மீடியாக்களில் பெரிதாக எடுபடாமல் போய்விட்டது.
நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா, “உலகை இயக்குவது கடவுள்….எல்லாம் அவன் செயல்” என்றார்.
அடுத்து பேசிய நடிகர் நாசர், “இந்த பேரிடர் நமக்கு கற்றுத் தந்த பாடம்… ஆபத்து காலத்தில் எந்த கடவுளும் வரமாட்டார் என்பதுதான். மனிதன்தான் மனிதனைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். கடவுளும் மதங்களும் பொய்த்தன. மனிதநேயம் நிமிர்ந்து நின்றது..” என்று பேசினார்.
அவரது பேச்சுக்கு அரங்கு நிறைந்த கைதட்டல்கள்.
இப்படி முழு நாத்திகரான நாசர் செய்த இன்னொரு செயல் ஆச்சரியப்பட வைக்கிறது.
நடிகர் சங்கத்துக்கு சரத்குமார் தலைவராக இருந்தபோது, அங்கே இருந்த கட்டிடம் இடிக்கப்பட்டது அல்லவா? அதோடு, அங்கிருந்த கோயிலையும் இடித்துவிட்டார்கள். அதில் இருந்த பிள்ளையாரை எடுத்து, காம்பவுண்ட்டுக்கு அருகில் ஒரு செட் போட்டு வைத்துவிட்டார்கள். அதற்கு வழி, வெளியில் இருந்துதான். அதாவது நடிகர் சங்கத்துக்கு உள்ளிருந்து போக முடியாது.
நடிகர் சங்க தலைவராக இருக்கும் நாசர், சில நாட்களுக்கு முன் நடிகர் சங்கத்துக்குச் சென்ற நாசர், அந்த (செட்) கோயிலையும் பார்வையிட்டார்.
அங்கிருந்த சிலர், “முன்பு இந்த விநாயகருக்கு தினமும் அர்ச்சனை நடக்கும்.. இப்போது செய்வதில்லை” என்று வருத்தப்பட்டனர்.
உடனே நாசர், “”தினமும் விநாயகருக்கு முறைப்படி பூஜை நடக்க வேண்டும்… அதற்கான
ஏற்பாடுகளை உடனே செய்யுங்கள்” என்று அலுவலக நிர்வாகியிடம்
அன்புக்கட்டளையிட்டார்.
தான் நாத்திகராக இருந்தாலும், தனது நிர்வாகத்தில் இருக்கும் கோயிலுக்கு வழக்கம் போல அர்ச்சனை நடக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நாசர்.. பாராட்டத்தக்கவர்.
இன்னொரு விசயம்.. இந்த இரண்டு சம்பவங்களுமே நடந்தது ஒரே நாளில்!
(படம் உதவி: மூத்த பத்திரிகையாளர் மேஜர்தாசன்)