ஊடககுரல்:
தனிப்பட்ட முறையில் பத்திரிகையாளருக்கும் விருப்பு வெறுப்புகள் இருக்கும். அதை நிகழ்ச்சியில் வெளிப்படுத்தாமல் இருப்பது அவசியம். ஆனால் இது அனைவராலும் முடியுமா..?
முடியாது என்பதற்கு நமது துறையிலேயே உதாரணங்கள் இருக்கின்றன. ஆனால் வாசிப்பவர்களை மனதில் கொண்டு ஊடகவியலாளர்கள் முடிந்த வரையில் விருப்பு வெறுப்பு இல்லாமல் செயல்படுவது மிக முக்கியம். சோஷியல் மீடியா மிக வலிமை பெற்றிருக்கும் இந்த காலக்கட்டத்தில் விருப்பு வெறுப்புடன் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் எளிதில் அடையாளம் காணப்படுகிறார்கள். வெகுஜன ஊடகங்களில் பணிபுரியும் யாரும் அப்படி அடையாளம் காணப்படுவது சரியான விஷயம் இல்லை என்றே நினைக்கிறேன்.
நடுநிலை என்று ஒன்று கிடையாது. அநியாயம் செய்தவரையும்,பாதிக்கப்பட்டவரையும் சமமாகவைத்து, வாய்ப்பு கொடுக்கும் இந்த நடுநிலை அநீதியே என்று ஒரு கருத்து உண்டு. உங்கள் கருத்து?
நடுநிலை என்ற ஒன்று இல்லை என்றுதான் நானும் நம்புகிறேன். ஆனால் அநியாயம் செய்தவரை அவரது சொற்களின் வாயிலாகவே அம்பலப்படுத்துவதுதான் ஒரு ஊடகவியலாளரின் அசலான கடமையாக இருக்க முடியும். அதை செய்வதற்கு நாம் அநியாயம் செய்தவருடனும் பேச வேண்டியிருக்கிறது. தலித் இளைஞர்கள் ஜீன்ஸ், கூலிங் கிளாஸ் அணிந்து ஏமாற்றுகிறார்கள் என்று சொன்னதன் மூலம் ராமதாசின் இன்னொரு பரிணாமத்தின் தீவிரம் நமக்கு தெரிய வந்தது. சாதி ஆணவக் கொலைகள் பற்றி கேள்வி எழுப்பி அதற்கு ராமதாஸ் பதில் சொல்ல மறுத்திருப்பது அந்த கட்சியின் பலவீனத்தை காட்டுகிறது. இன்று வரையில் அன்புமணி ராமதாஸ் அதற்கு மறுப்பு தெரிவிக்க வேண்டியிருக்கிறது.
அவர்களின் வாதங்களில் அவர்களே அம்பலப்பட்டுப்போவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அப்படி அம்பலப்படுத்துவதுதான் ஒரு ஊடகவியலாளரின் கடமையாக இருக்க முடியும். புறக்கணிப்பது அல்ல.
24 மணி நேர செய்தி சேனல்கள், இணைய இதழ்கள் தேவையில்லை என்று ஒரு கருத்து உள்ளது. இவற்றால் தேவையற்றவை எல்லாம் செய்தி அந்தஸ்து பெறுகின்றன என்பதற்கு தங்கள் பதில்?
செய்தி சேனல்களும், இணைய இதழ்களும் வந்த பிறகு செய்தி பரவலாக்கம் நடந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. பார்வையாளர்களையும் ஏமாற்ற முடியாது. இரண்டு கட்சி சேனல்களை பார்த்து அதற்கிடையில்தான் உண்மை இருக்கிறது என்பதை பார்வையாளர்களும் உணர்ந்திருக்கிறார்கள். செய்தி அந்தஸ்து இல்லாதவை எல்லாம் செய்தி ஆகிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால் அதன் பின்னால் என்ன அரசியல் இருக்க முடியும் என்று ஒரு வாசகரால்/பார்வையாளரால் ஊகிக்க முடியும் என்றே நினைக்கிறேன்.
அச்சிதழ்களைவிட, தொ.கா. ஊடகம்தான் சிறப்பானதா?
இதுவரை தொலைகாட்சி ஊடகத்தில் வேலை பார்த்ததில்லை. தொலைகாட்சியின் பரபரபரப்புகளுக்கு ஒரு அச்சு ஊடகவியலாளராக ஈடு கொடுக்க முடியாது என்றே நினைக்கிறேன். ஒரு பிரச்னையைப் பற்றிய அலசலும் ஆய்வும் தொலைக்காட்சி ஊடகங்களில் சாத்தியமா என்று தெரியவில்லை.
நீங்கள் எழுதி சர்ச்சையான விசயங்கள் என்னென்ன..?
2000த்தில் இந்தியா டுடேவில் பணி புரிந்த போது ஒரு நண்பர் அவர் பணிபுரியும் நிறுவனத்தில் அவரால் எழுத முடியாதென்று ஒரு செய்தியை சொன்னார். ஏனாத்தூரில் சங்கர மடத்தால் நடத்தப்பட்டு வரும் கல்லூரியில் பார்ப்பனர்களுக்கு தனியாகவும் பார்ப்பனரல்லாதவர்களுக்கு தனியாகவும் உணவறைகள் இருப்பதுதான் அந்த செய்தி. ஏனாத்துருக்கு சென்று ஒரு நாள் முழுவதும் கல்லூரி வாயிலிலேயே கழித்து பல மாணவர்களுடன் பேசி உறுதி செய்து கொண்டேன். கல்லூரி தாளாளரையோ சங்கர மடத்தையோ தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்கள் பதில் சொல்ல தயாராக இல்லை. கட்டுரை வெளி வந்த பிறகு பலர் தொடர்பு கொண்டு திட்டித் தீர்த்தார்கள். ஆனால் முற்போக்கு அமைப்புகள் பல கல்லூரியின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தி பின்னர் அந்த திட்டத்தை கைவிட வைத்தார்கள்.
தி வீக்கில் பணி புரிந்த போது இலங்கைக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இலங்கையில் காணாமல் போகும் தமிழ் இளைஞர்கள் பற்றி நான் எழுதிய கட்டுரைக்கு ரெட்கிராஸின் பரிசு கிடைத்தது. விடுதலைப்புலிகள் என்று சந்தேகத்துக்குளாகும் இளைஞர்கள் துணை ராணுவத்தினரால் கடத்தப்படுவது போர் காலம் தொடங்கி இப்போது வரையில் நடந்து கொண்டுதானிருக்கிறது. ஆனால் அதை அங்கிருக்கும் இந்திய ஊடகங்கள் எதுவும் கவனப்படுத்தவில்லை என்பது வேதனை. அதுகுறித்து ஆங்கில ஊடகத்தில் அனேகமாக என்னுடைய கட்டுரைதான் முதல் கட்டுரை என்று சொல்லிக்கொள்வது உண்மையிலேயே பெருமையான விஷயமாக இல்லை.
சரணடைந்து இறப்பதற்கு முன்பு நடேசனை இறுதி பேட்டி எடுத்தேன். அதற்கு முன்பே அவரை இரண்டு முறை பேட்டி எடுத்திருக்கிறேன். ஆனால் இதற்கெல்லாம் பயனாக, 2009ல் போர் முடிந்த பிறகு அதை கவர் செய்யும் வாய்ப்பு எனக்கு மறுக்கப்பட்டது. அப்போது இந்தியாவின் எல்லா ஊடகங்களுக்கும் இலங்கை அரசு விசா தர, எனக்கு மட்டும் விசா மறுக்கப்பட்டது. தில்லி அலுவலகத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. பிறகு எனக்கு பதில் தி வீக்கின் தில்லி செய்தியாளர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அதன் பிறகு மூன்று முறை இலங்கைக்கு சென்று வந்துவிட்டேன். ஆனால் போர் முடிந்த உடனேயே போக முடியவில்லை என்பதில் வருத்தம்தான். எனக்கு மட்டும் விசா மறுக்கப்படும் அளவிற்கு அரசுக்கு எதிராக செய்திகள் தந்திருக்கிறேன் என்பது மட்டும்தான் ஒரே ஆறுதல்.
அதே போல வெகுஜன ஊடகங்களில் சந்திக்க கூடிய நெருக்கடிகளையும் சந்தித்திருக்கிறேன். போருக்கு பிறகு இலங்கையின் சுற்றுலா துறையின் வளர்ச்சி பற்றி ஒரு கட்டுரை வேண்டுமென்று என் மீது கடுமையான அழுத்தம் இருந்தது. நான் கொடுத்த சில தகவல்களை வைத்து கட்டுரை ஒன்றும் வந்தது. எனது பெயரில் வெளியானாலும் அது என் கட்டுரையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை வெகுஜன ஊடகங்களில் பணியாற்றுபவர்கள் அறிவார்கள்.
(நாளை நிறைவுப் பகுதி)