நடந்தது இன அழிப்புதான்: இலங்கை நாடாளுமன்றத்தில் அறிக்கை
2009ம் ஆண்டு இலங்கையில் நடந்த யுத்தத்தின் போது, போர்க்குற்றத்தில் அரசபடை ஈடுபட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் 2013ஆம் ஆண்டு இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே போர்க்குற்றங்களை விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை அமைத்தார். இதற்கு தலைமை தாங்கியவர் முன்னாள் நீதிபதி மக்ஸ்வெல் பரணகம .ச
இந்த குழு போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தி, அறிக்கையை தற்போதைய அதிபர் சிறிசேனவிடம் அளித்திருக்கிறது.
178 பக்கங்களைக் கொண்ட இந்த விசாரணைக் குழுவின் அறிக்கை இலங்கை நாடாளுமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில், இலங்கை ராணுவம் போர்க்குற்றத்தில் ஈடுபட்டது உண்மைதான் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இலங்கை இறுதி யுத்தத்தின் போதான போர்க் குற்றங்களை மட்டுமின்றி முந்தைய காலத்தில் நடந்த போர்க்குற்றங்கல் குறித்தும் ஆராய வேண்டும் என்றும் மூத்த ராணுவ தளபதிகளுக்கு எதிராக குற்றவியல் விசாரணை நடத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறது.
“இங்கிலாந்தச் சேர்ந்த சேனல் 4 தொலைக்காட்சியில் போர்க் குற்றங்கள் தொடர்பாக வெளியிடப்பட்ட காட்சிகள் அனைத்தும் உண்மையே. அதில் காட்டப்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்படும் காட்சிகள் நிஜம்தான். இலங்கை நீதித்துறையில் போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு தனிப் பிரிவு அமைக்க வேண்டும். வெள்ளைக் கொடி ஏந்தி வந்த விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள் பா. நடேசன், புலித்தேவன் உள்ளிட்டோர் சரணடைந்த போது அவர்களை சுட்டுப் படுகொலை செய்த சம்பவம் குறித்தும் நீதி விசாரணை நடத்த வேண்டும்” என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இலங்கை அரசின் போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடக்க வேண்டும் என்கிற நிலையில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, “உள்நாட்டு விசாரணையே நேர்மையாக நடக்கும்” என்கிற தோற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியாகவும் இது இருக்கக்கூடும் என்றும் சில தரப்பினர் சந்தேகத்தை எழுப்புவதும் குறிப்பிடத்தக்கது.