டெல்லி: ரயில் பெட்டிகளை கொரோனா மருத்துவமனைகளாக மாற்றுமாறு நீதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா நோயாளிகளாக மாறி வருகின்றனர். கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் முன்னதாக ரயில் பெட்டிகள் கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்டன.
5,150 ரயில் பெட்டிகள் (குளிர்சாதன வசதி இல்லாதவை) ஏற்கனவே தனிமைப்படுத்தும் மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. அவற்றில் சில ஆக்ஸிஜன், ஐசியு மற்றும் வென்டிலேட்டர் வசதிகளுடன் மருத்துவமனைகளாக மேம்படுத்தப்பட வேண்டும் என்று நீதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது.
இது குறித்து நீதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி கே பால் கூறி இருப்பதாவது: இந்த யோசனை பிரதமரிடமிருந்து வந்தது. இந்த தனிமைப்படுத்தும் சில வசதிகளை மருத்துவமனைகளாக மாற்றுவது மிகவும் தர்க்கரீதியான படியாகும்.
குறிப்பாக மருத்துவ உள்கட்டமைப்பு இல்லாத இடங்களில் இவற்றை பயன்படுத்தலாம். 24 மணி நேரத்திற்குள் நாட்டில் எங்கும் செல்லலாம், அவற்றை எங்கும் நிறுத்தலாம். இந்த ரயில் மருத்துவமனைகளில் சில தொற்றுநோய்களுக்குப் பிறகும், பேரழிவுகளின் போதும் பயன்படுத்தப்படலாம் என்றார்.
சுகாதார அமைச்சகத்துடன் கலந்தாலோசித்தபடி, நாங்கள் தயார் செய்திருந்தோம். தேவைப்பட்டால், தனிமைப்படுத்தும் வசதி இல்லாத பகுதிகளில் இவை பயன்படுத்தப்படும். அந்த அளவிலேயே இந்த விஷயம் இப்போது உள்ளது என்று வடக்கு ரயில்வேயின் முதன்மை தலைமை பொறியாளர் அருண் அரோரா கூறினார்.