ரஜினிகாந்த் விஜயகாந்த் கமல் ஒப்பீடு

 

ரஜினி அரசியலுக்கு வரப்போகிறார் என்று 20 வருடங்களுக்கும் மேலாக பேசப்படுகிறது. ஜெயலலிதா கருணாநிதி ஆளுமையாக இருந்த தருணத்தில் வருவதற்கான துணிச்சல் அவருக்கு இல்லை. அதனால் தற்போது வருவதற்கான முயற்சியில் இருக்கிறார் அல்லது வரலாமா என்கிற தியானத்தில் இருக்கிறார் என்று கொள்ளலாம். ரஜினிகாந்திற்கு A , B, C மூன்று சென்டர்களிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். 234 தொகுதியிலும் பிரபலமான முகம். இதுவே அவரது மூலதனம்.

விஜயகாந்தைப் பொறுத்தவரை கருணாநிதி, ஜெயலலிதா என்கிற இரண்டு ஆளுமைகள் இருக்கும்பொழுதே துணிச்சலாக அரசியலுக்கு வந்தவர். எதிர்கட்சித் தலைவராகவும் வளர்ச்சி பெற்றார். ஆனால்,தற்போது செயல்படமுடியாத தலைவராகத்தான் மக்களால் பார்க்கப்படுகிறார். பி அண்ட் சி சென்டர்களில் வலிமை பெற்ற விஜயகாந்தின் நிலையே தள்ளாட்டமாகத்தான் இருக்கிறது.

கமலைப் பொறுத்தவரை 234 தொகுதியிலும் பிரபல முகம்தான். ஆனால், ரஜினியை பார்ப்பது போன்ற ஒரு நெருக்கம் கமலிடம் கிடையாது. கமலை ஒரு அந்நியத்தன்மையுடன்தான் தமிழ் நாட்டுமக்கள் பார்த்தார்கள். அவருடயை பல படங்கள் பி அண்ட் சி சென்டர்களில் வெற்றிப் பெற்றது கிடையாது..  ஆளவந்தான், ஹேராம், உன்னைப் போல் ஒருவன்  போன்ற பல படங்களை உதாரணமாக சொல்லலாம்.

ஜனரஞ்சகம் என்று நம்பி அவர் எடுத்த விருமாண்டி திரைப்படம் கூட உசிலம்பட்டி மலையாண்டி திரையரங்கில் நான்கு நாட்கள் கூட ஓடவில்லை.  ஆகவே கமல் ஒருவேளை அரசியலுக்கு வந்தால், இந்த காரணிகள்தான் அவர் வெற்றியை தீர்மானிக்க வேண்டும். இந்த அடித்தட்டு மக்களின் நம்பிக்கையை, அமைச்சர்களின் ஊழல் என்கிற ஒற்றைக்குற்றச்சாட்டின் மூலம்  வென்று விடலாம் என்று நினைக்கிறாரோ என்னவோ.?

.

எம்ஜிஆர் இறந்தபோது சிவாஜி, பாக்யராஜ் போன்றோர்களுக்கு தனிக்கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் வந்தது. 89ம் ஆண்டு தேர்தலில் நின்றார்கள் . படு தோல்வி அடைந்தார்கள். அதே போல் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ரஜினிகாந்த், கமலகாசன் போன்றோர்களுக்கு ஆசை எட்டிபார்க்கிறது.  ரஜினி தனது ரசிகர் பலத்தை நம்புகிறார்.

கமலோ ரஜினி போல் தனக்கு ரசிகர் படை இல்லாததால்,அரசை விமர்சித்து, அறிவு ஜீவி அடையாளத்தை வெளிப்படுத்தி, தனது அரசியல்  ஆசையை வெளிப்படுத்துகிறார்.   கமலகாசனை இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்து விட்ட காரணத்தினால்,முற்போக்குவாதிகள் ஆதரிப்பது நகைச்சுவை.

அரசை விமர்சிக்க வேண்டுமென்றால், நீட் தேர்வுக்கு ஆதரவான போராட்ட களத்தில் நின்று விமர்சனம் செய்யுங்கள். கதிராமங்கலத்தில் நிற்கிறார்களே அந்த விவசாயிகளுடன் நின்று எதிர்த்து பேசுங்கள். அதை விடுத்து, கமலுடன் நின்று அரசை விமர்சிப்பது சரியான அரசியல் நகர்வாக இருக்காது.

கமலுக்கு இருக்கும் முற்போக்கு, பிற்போக்கு அடையாளங்கள் அனைத்தையும் திரைப்படம் முடிந்ததும் அவரே அழித்துவிடுவார். இதை உணராமல் அவருக்கு அரசியல் முகம் கொடுக்க வேண்டாம். ஒவ்வொரு படத்திற்கும் அவருக்கு தேவைப்படுவது நல்ல வணிக முகம். அந்த முகத்திற்காக எல்லா அவதாரங்களையும் எடுப்பார். ஏனென்றால் அடிப்படையில் அவர் நல்ல கலைஞன்.

தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த நடிகர் கமல்ஹாசனுக்கு,

கமல்ஹாசன் என்னும் ஆளுமை அரசியலுக்கானதா மூன்றாம் பிறையில் அழ வைத்து, நம்மவர் போன்ற திரைப்படங்களின் மூலம் நெகிழ வைத்தவர் நீங்கள். இன்னும் முதிர்ச்சியான படைப்புகளை தமிழ் சூழலுக்கு தரலாமே.

(நிறைவு)