
தே.மு.தி.க கொள்கைபரப்பு செயலாளர் சந்திரகுமார் பத்து மாவட்ட செயலாளர்களுடன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
“விஜயகாந்த்தின் உண்மை விசுவாசியாக கடந்த 1980-முதல் இருந்து நாங்கள் வருகிறோம். கடந்த ஐந்து ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் மிகப்பெரிய பாதிப்பிற்கு ஆளான ஒரே கட்சி தே.மு.தி.க. தான்.
எண்ணற்ற கஷ்டங்களுக்கிடையே தே.மு.தி.க.வில் இருந்தோம். என் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. நான் மட்டுமின்றி தொண்டர்களும் வழக்குகளால் பாதிக்கப்பட்டோம்.
ஜெயலலிதாவை ஆட்சியை விட்டு இறக்குவேன், இதற்காக எந்த தியாகமும் செய்வேன் என்று விஜயகாந்த் முழங்கினார். ஆனால் அதற்கு மாறாக செயல்படுகிறார் விஜயகாந்த்.
தி.மு.க.வில் கூட்டணி வைக்க வலியுறுத்தினோம். எங்கள் விசுவாசத்திற்கு மதிப்பில்லை.மக்கள் நலக்கூட்டணியுடன் அவர் சேர்ந்தது தனிச்சையான முடிவு.
இது ஜெயலலிதாவுக்கு ஆதரவாக விஜயகாந்த் எடுத்த முடிவு. தே.மு.தி.கவில் இருந்து நாங்கள் யாரும் விலகவில்லை. விஜயகாந்தின் முடிவு தற்கொலைக்கு சமானது.
தே.மு.தி.க சேராவிட்டாலும் தேர்தலில் தி.மு.க தான் வெற்றி பெறும்” என்றார்.
அவரிடம், “தி.மு.க. ஊழல் கட்சி என்பதால் அதனுடன் தே.மு.தி.க. சேரவில்லை என்று கூறப்படுகிறதே” என்றுகேட்டபோது
“கடந்த முறை அ.தி.மு.கவுடன் கூட்டணி சேர்ந்தோம். அப்போது அக் கட்சி தலைவர் மீது சொத்துக்குவிப்பு ஊழல் வழக்கு இருந்தது. தொணடர்கள் விருப்பப்படி கூட்டணி வைத்தோம். அதே போலத்தான் இப்போதும் வைத்திருக்க வேண்டும்” என்றார்.
Patrikai.com official YouTube Channel