என். சொக்கன்
a
மீபத்தில் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, ‘ஓட்டு என்பது தமிழ்ச்சொல் இல்லை என்றால் யார் நம்புவார்கள்?’ என்றேன்.
கேட்டுக்கொண்டிருந்த பலருக்கு அதிர்ச்சி, ‘ஓட்டு தமிழ்ச்சொல்தானே? ஓட்டுப்போடுங்கள் என்று சொல்கிறோமே, ஓட்டுக்கேட்டுவருகிறார்கள் என்கிறோமே, ஓட்டுப்பதிவு நடந்தது என்கிறோமே’ என்றார்கள்.
‘ஓட்டு’ என்பது ஒருவிதத்தில் தமிழ்ச்சொல்தான், ‘வாகனத்தை ஓட்டு’ என்று சொன்னால், அது தமிழ்ச்சொல், ‘ஓட்டு வீடு’ என்று சொன்னால் அது தமிழ்ச்சொல். ஆனால், ‘ஓட்டுப்போடு’ என்றால், அது தமிழ்ச்சொல் அல்ல, Vote என்ற ஆங்கிலச்சொல்லைதான் உகரம் சேர்த்து ‘ஓட்டு’ என்று அழைக்கிறோம்.
அதற்குப்பதிலாக, அதனை ‘வாக்கு’ என்று அழைக்கலாம். இதுவும் நன்கு புழக்கத்தில் உள்ள சொல்தான், வாக்காளர், வாக்குரிமை, வாக்குச்சாவடி, வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை, வாக்குச்சதவிகிதம் என்று அடுக்கிக்கொண்டேபோகலாம்.
 ‘வாக்’ என்ற வடமொழிச்சொல்லிலிருந்து வருவது ‘வாக்கு’, இதற்குச் ‘சொல்’ என்று பொருள், அதாவது ஒருவர் சொல்லும் விஷயம்.
ஆக, ‘வாக்குரிமை’ என்றால் பேசுவதற்கான உரிமை, ‘எனக்கு இவர்தான் பிரதிநிதியாக வேண்டும்’ என்று சொல்வதற்கான உரிமை.
இப்படி ஊரில் எல்லாரும் சத்தம்போட்டுச் சொன்னால் குழப்பமாகிவிடும். ஆகவே, முன்பு வாக்குச்சீட்டைப் பயன்படுத்தினோம், அதாவது, தங்கள் பிரதிநிதி யார் என்கிற கருத்தைப் பதிவு செய்கிற துண்டுச்சீட்டு.
இப்போது, வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்துகிறோம், வாயால் சொல்லாமல், விரலால் தொட்டு வாக்கைப் பதிவுசெய்கிறோம்.
ஒரு குறிப்பிட்ட பொறுப்பை வேட்பவர் வேட்பாளர் என்று ஆனதுபோல், இவர் வாக்கு இடுபவர், ஆகவே, வாக்காளர்.
‘வாக்கு’ என்ற சொல்லைவைத்துப்பிறந்த இன்னொரு சுவையான சொல், ‘செல்வாக்கு.’
‘அவருக்கு ஊரில் நிறைய செல்வாக்கு’ என்றால், அவருடைய வாக்கு, எங்கும் செல்லக்கூடியது என்று பொருள், அதாவது, செல்வாக்கு, செல்லுகின்ற வாக்கு, அவர் சொன்னால் எல்லாரும் கேட்பார்கள்!
(தொடரும்)