என். சொக்கன்
1
வேதாந்தப்பாடல்கள் வரிசையில், ‘கடமை’ என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதுகிறார் பாரதி, அதிலிருந்து சில வரிகள்:
‘கடமைபுரிவார் இன்புறுவார்
என்னும் பண்டைக்கதை பேணோம்,
கடமைஅறியோம், தொழில்அறியோம்,
கட்டுஎன்பதை வெட்டுஎன்போம்,
கடமை நினைவும் தொலைத்துஇங்கு
களியுற்று என்றும் வாழ்குவமே.’
நம் அரசியல்தலைவர்கள் கடமையைப் பெரிய விஷயமென வற்புறுத்திக்கொண்டிருக்கையில், பாரதியார் கடமை வேண்டாம் என்கிறாரே, அதைக் கட்டு என்கிறாரே, அதைத் தொலைத்தால் மகிழ்ச்சி என்கிறாரே… இதென்ன வேதாந்தம்!
பகவத்கீதையை நாமனைவரும் நினைவில் வைத்துக்கொண்டிருக்கிற வடிவம்: ‘கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே.’
‘என் கடன் பணிசெய்து கிடப்பதே’ என்றார் திருநாவுக்கரசர். இங்கே ‘கடன்’ என்பதும் கடமையைதான் குறிக்கிறது.
வங்கியில் வாங்கும் கடன்கூட, ஒரு கடமைதானே? திருப்பிச்செலுத்தவேண்டிய கடமை.
புறநானூறில் ஒரு கடன்பட்டியல், அதாவது, கடமைப்பட்டியல் வருகிறது, எழுதியவர் பொன்முடியார்:
‘ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே,
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே,
அரும்சமம் முருக்கி,
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.’
மகனைப் பெற்றுவளர்த்தல் தாயின் கடமை, சான்றோன் ஆக்குதல் தந்தையின் கடமை, போரிலே யானையை வென்று தன் அரசனுக்கு வெற்றிதேடித்தரவேண்டியது அந்த மகனின் கடமை.
இங்கே போர் என்பதை இன்றைக்கு நாம் ‘வேலை’ என்றோ ‘படிப்பு’ என்றோ கொள்ளலாம். எடுத்த வேலையைச் சிறப்பாகச் செய்யவேண்டியது நம் கடமை.
அப்படியானால், அரசியல்வாதிகள் சொல்லும் கடமை?
ஒருவர் எந்த நோக்கத்துடன் அரசியலுக்கு வந்தாரோ, யாருக்காக அரசியலுக்கு வந்தாரோ, அந்த நோக்கத்துக்காக, அவர்களுக்காக உழைத்தல் ஓர் அரசியல்வாதியின் கடமை என்று கொள்ளலாம். இதை அவர் உணர்ந்திருந்தால், அதன் அடிப்படையில் அவரது ஒவ்வொரு நடவடிக்கையும் அமையும்.
அவரே தேர்தலில் நின்று ஒரு தொகுதியின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்படும்போது, அல்லது, அமைச்சராக, முதல்வராக, பிரதமராக வரும்போது, அவருடைய கடமைகள் அதிகமாகக்கூடும்.
உதாரணமாக, கம்ப ராமாயணத்தில் தசரதன் ராமனுக்கு முடிசூட்ட விரும்பும்போது, அதைத் தன் மகனிடம் சொல்கிறான், அப்போது கம்பர் சொல்கிற வரிகள்:
‘தாதை அப்பரிசு உரைசெயத் தாமரைக் கண்ணன்
காதல் உற்றிலன்; இகழ்ந்திலன்; கடன் இது என்று உணர்ந்து…
அப்பணி தலைநின்றான்
தசரதன் இப்படிச் சொன்னதும், ராமன் மகிழவில்லை, வருந்தவில்லை, இது கடமை என்று உணர்ந்து ஏற்றுக்கொண்டான்.
கடமை என்பது அரசியல், பொறுப்புகளில்மட்டுமில்லை, ஒரு தந்தை/தாய்/சகோதரன்/சகோதரி/மகன்/மகள் என்றமுறையிலும் பலருக்குப் பல கடமைகள் இருக்கக்கூடும்.
ஆக, கடமை என்பது ஒரு பொறுப்போடு வருகிறது, இதைச் செய்யவேண்டும் என்று வழிநடத்துகிறது, இன்னொரு கோணத்தில் பார்த்தால், வரம்பு போடுகிறது.
அதைத்தான் பாரதி வேதாந்தப்பாடலில் தொலைக்க விரும்புகிறானோ? ‘விட்டுவிடுதலையாகி நிற்பாய் அந்தச் சிட்டுக்குருவியைப்போல’ என்று சுதந்தரமாகத் திரியவிரும்பும் கவிமனத்துக்குக் ‘கடனே’ என்று ஒரு வேலையைச் செய்வதில் விருப்பமிருக்காதுதான்.
(தொடரும்