கட்டுரையாளர்: என். சொக்கன்
c
தமிழ்ச்சொற்களைப் பகுபதம், பகாப்பதம் என்று வகைப்படுத்துவார்கள்.
பகுத்தல் என்றால் பிரித்தல், பகுபதம் என்றால் பகுக்கக்கூடிய, அதாவது, பிரிக்கக்கூடிய சொல், பகாப்பதம் என்றால் பிரிக்க இயலாத சொல்.
வேடிக்கையாகச் சொல்வதென்றால், பகுபதம் என்பது, காப்பிமாதிரி, அதைக் குடிக்கும்போது ஒரே திரவமாகத் தெரிந்தாலும், அதற்குள் இருப்பது பால், டிகாஷன், சர்க்கரை என்று பகுத்துச் சொல்லிவிடலாம்.
ஆனால், பகாப்பதம் இளநீர்மாதிரி, அப்படியே குடிக்கவேண்டியதுதான், பிரித்துப்பார்க்க இயலாது.
உடனே, இளநீரில் என்னென்ன வேதிப்பொருள்கள் இருக்கின்றன என்று யோசிக்காதீர்கள். இதையெல்லாம் அனுபவிக்கவேண்டும், ஆராயக்கூடாது!
‘இயக்கம்’ என்பது, அரசியல் கட்சிகள் அல்லது கழகங்கள் பயன்படுத்துகிற இன்னொரு சொல், இதுவொரு பகுபதம், இதனை இயக்கு + அம் என்று பிரிக்கலாம்.
இதில் ‘இயக்கு’ என்பது ஒரு வினைச்சொல், அதோடு ‘அம்’ என்ற விகுதி சேர்கிறது. இயங்கிக்கொண்டிருக்கும் ஓர் அமைப்பு என்ற பொருளைத்தருகிறது.
இதேபோல், மயக்குதல் என்ற வினைச்சொல்லுடன் ‘அம்’ விகுதியைச் சேர்த்தால், மயக்கம், குழப்புதலுடன் ‘அம்’ சேர்த்தால், குழப்பம். தயங்குதலுடன் ‘அம்’ சேர்த்தால் தயக்கம், கிறங்குதலுடன் ‘அம்’ சேர்த்தால் கிறக்கம். உறங்குதலுடன் ‘அம்’ சேர்த்தால் உறக்கம்.
கண்ணுக்குத்தெரிகிற பொருள்களிலும் ‘அம்’ விகுதி உண்டு. உதாரணமாக, வளைதல் என்ற வினைச்சொல்லுடன் ‘அம்’ சேர்த்தால், வளையம்!
இப்படி வினைச்சொற்களுடன் ‘அம்’ விகுதியைச் சேர்ந்து பல சொற்கள் உருவாகியுள்ளன, புதியனவற்றையும் உருவாக்கலாம்.
அப்படிச் சில ஆண்டுகளுக்குமுன் உண்டாகி, இப்போது பரவலாகப் பயன்படுத்தப்படுகிற புதுச்சொல், இணையம். கணினிகளை, அவற்றைப் பயன்படுத்துவோரை இணைப்பதுதானே அது!
(தொடரும்)