0
சென்னை:
மிழக சட்டப்பேரவை தேர்தல் நாளான மே 16 ம் தேதியன்று அனைத்து தனியார் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்கவேண்டும் என  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் மே மாதம் 16ம் தேதி நடைபெறுகிறது.  தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான நாள் முதல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ராஜேஷ் லக்கானி, “தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தபின் இன்று வரை பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தாக 1,48,390 புகார்களும், தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக 44,095 புகார்களும் வந்துள்ளன. . சுவர்களில் எழுதியது தொடர்பாக வந்த 1,01,206 புகார்கள் சுவரில் எழுதியதை அழித்து விட்டதால் முடிவுக்கு வந்தன. பொது சொத்துக்கு சேதம் விளைவித்தாக 887 வழக்குகளும், தனியார் சொத்துக்கு சேதம் விளைவித்தாக 208 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் தேர்தல் நாளான 16.05.2016 அன்று அனைத்து தனியார் நிறுவனங்கள், ஐ.டி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள்  அனைத்தும் சம்பளத்துடன் விடுமுறை அளிக்கவேண்டும். தேர்தல் நாளில் விடுமுறை வழங்கப்படுவதால் நிறுவன பணியாளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க உறுதி கொள்ள வேண்டும்.
வண்ண வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்படுவது தொடங்கப்பட்டு இக்குறுகிய நாட்களில் இதுவரை 38 ஆயிரம் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
தொலைக்காட்சிகளில் வரும் தேர்தல் செய்திகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.  சாதாரண மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தேர்தல் பணியாற்ற தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று  ராஜேஷ் லக்கானி கூறினார்.