தூத்துக்குடி:

விரைவில் அறிவிக்கப்பட உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிடுவார் என திமுக எம்எல்ஏ கீதா ஜீவன் தெரிவித்து உள்ளார்.

கடந்த ஒரு மாதமாக திமுக சார்பில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் ஸ்டாலின், கனிமொழி மற்றும் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினும் பங்கேற்று வருகிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் கிராமசபா கூட்டங்களில் கனிமொழி பங்கேற்று மக்களை குறை கேட்டு வருகிறார். இதன் காரணமாக அவர் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், கோவில்பட்டி அருகே நடைபெற்ற திமுகவின்  ஊராட்சி சபை கூட்டத்தில் கலந்துகொண்ட  பெ.கீதாஜீவன் எம்எல்ஏ அங்குள்ள மக்கள் மத்தியில் பேசினார். அப்போது,  தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக சார்பில்கனிமொழி எம்.பி. போட்டியிடுகிறார். ஏற்கெனவே 10 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருக்கும் அவர், ஆங்கிலத்தில் சரளமாக பேசக்கூடியவர்.

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுகாங்கிரஸ் ஆட்சியமைக்கும்போது, அவர் மத்திய அமைச்சராக கூட வரலாம். ஜிஎஸ்டி வரி விதிப்பு கொண்டு வந்த பின்னர் தீப்பெட்டி, பட்டாசு தொழில்கள் நலிவடைந்து விட்டன. தமிழகத்தில் மட்டும் 50 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன என தமிழக அமைச்சரே தெரிவித்துள்ளார்.

எனவே, மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும், கனிமொழிக்கு நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கூறினார்.

இதன் காரணமாக  கனிமொழி தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்ட உள்ளது.