சென்னை:
மாட்டுக்கறி உண்ணுவது பற்றி விமர்சித்த நடிகர் கமலுக்கு எதிராக இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் போராட்டம் நடத்தப்போக்றைரே என்ற செய்தி பரவி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பா.ஜ.க. அரசு மத்தியில் பதவி ஏற்ற பிறகு, இந்ததுத்துவவாதிகள் தீவிரமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், மகராஷ்டிர மாநிலத்திலும் பா.ஜ.க. – சிவசேனை கூட்டணி ஆட்சியைப் பிடித்த பிறகு மாட்டுக்கறிக்கு தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து நாடுமுழுதும் பலர் குரல் கொடுத்தார்கள். நடிகர் கமல்ஹாசனும் தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.
இதன் பிறகு சமீபத்தில், மாட்டுக்கறி தின்றகாக டில்லி அருகே தாத்ரி என்ற பகுதியில் இஸ்லாமியர் ஒருவர் இந்துத்துவ கும்பலால் கொல்லப்பட்டார். இதற்கும் கமல்ஹாசன் உட்பட பல்வேறு தரப்பினர் குரல் கொடுத்தார்கள். \
இந்த நிலையில் நேற்று முன்தினம், தனது 61வது பிறந்தநாளை கொண்டாடிய கமல், அது தொடர்பான நிகழ்ச்சியில் பேசினார். அப்போது, “இங்கு பரிசு பொருட்கள் எனக்கு அளிக்கப்பட்டன. வெள்ளியிலான சாமி சிலையும் தந்தார்கள். புத்தகம், மருந்துகள் பயன்படக் கூடியவை. சாமி சிலை எந்த பயன் தராது. பக்தியும் மேம்படாது. அதை உருக்கத்தான் வேண்டும்.
எனது சித்தாந்தம் கடவுள் மறுப்பு. ஆனாலும் ஒரு தாய் அன்பாக என் நெற்றியில் விபூதி பூசினால் அதை அழிக்கமாட்டேன். அதுதான் என் பகுத்தறிவு.
தெய்வங்களுக்கும் காலாவதி தேதி உண்டு. என் படைப்புகளுக்கும் காலாவதி தேதி உண்டு. ஒருவன் வழிபாட்டு ஸ்தலத்தில் மது அருந்திக்கொண்டு இருந்தான். இன்னொருவன் இந்த இடத்தில் குடிப்பது பாவம் என்றான். “ஏன்?” என்று குடிகாரன் கேட்டதற்கு, “இங்கு இறைவன் இருக்கிறான்” என்றான் பக்தன். உடனே குடிகாரன் “இறைவன் இல்லாத இடத்தை காட்டு. அங்குபோய் குடிக்கிறேன்” என்றானாம்.
தெய்வங்கள் அவரவர் பாக்கெட்டில் இருக்கட்டும். மற்றவர்களிடம் திணிக்காதீர்கள்.
நான் நாத்திகன் அல்ல. நாஸ்தி, ஆஸ்தி இரண்டும் வடமொழி சொற்கள். நான் பகுத்தறிவாளன். மந்திர சக்தி உள்ள எவரேனும் இதுதான் தெய்வம் என்று என் முன் நிறுத்தினால் நான் கை குலுக்கி வரவேற்பேன். கும்பிடமாட்டேன். அந்த தெய்வத்திடம் சில கேள்விகள் கேட்பேன்.
சுனாமி வந்தபோது எங்கு இருந்தீர்கள்..? ஏழ்மை வந்தபோது எங்கு இருந்தீர்கள்..? ஆண்-பெண் என்ற பாலினம் உங்களுக்கு தேவையா..? வடமொழியில் மட்டும்தான் பேச முடியுமா…? எனது தமிழில் ஏன் பேசவில்லை என்றெல்லாம் கேட்பேன்.
மாட்டுக்கறி சாப்பிடாதீர்கள் என்று கூறுகிறார்கள். அதை சாப்பிட வேண்டாம் என்பதற்கு மருத்துவ ஆதாரம் இருக்கிறது. நான் சாப்பிட மாட்டேன். மிருக உணவுகளை சாப்பிடுவது அவரவர் விருப்பம். அதை ஏன் தடுக்கிறீர்கள்…? இதை, இதைத்தான் சாப்பிடவேண்டும் என்று நீங்கள் எப்படி உணவு பட்டியல் கொடுக்கலாம். மாடுகளைவிட பூச்சிகளை சாப்பிடுவது நல்லது என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். 30 வருடங்களுக்கு பிறகு மனிதன் பூச்சிகளை சாப்பிடும் நிலை வரலாம். அப்போது பூச்சி சாமியார்கள் தோன்றி பூச்சிகளை சாப்பிடக் கூடாது என்று தடுப்பார்கள்” என்று ஆவேசமாக பேசினார்.
இதற்கு உடனடி விளைவாக மறுநாளே (நேற்று) து இந்துமுன்னணி தலைவர் ராமகோபாலன், கமல்ஹாசன் பேசியது குழந்தைத்தனமாகவும் வேடிக்கையாகவும் உள்ளதாக கண்டனம் தெரிவித்து அறிக்கை விட்டார்.
அந்த அறிக்கையில், “” ஒரு கலைஞனுக்கு அந்த சிலை வடிவில் உள்ள உள்ள கலை வடிவத்தை ரசிக்க தெரிய வேண்டாமா? பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டாமா? அதில் உள்ள தங்கத்தின் மதிப்பு மட்டும் தெரிந்திருந்தால் எப்படி?
கமல்ஹாசன் குழந்தைத்தனமாகவும், வேடிக்கையாகவும் பேசுகிறார். தான் கூறிய கருத்து தனக்கே உடன்பாடு இல்லாதது என்பதை அறியாதவர், தன்னை பகுத்தறிவுவாதி என்று கூறியிருப்பது வேடிக்கையானது.
கடவுளை சந்தித்தால், உலகில் ஏன் எத்தனை வேறுபாடு என இறைவனை கேட்பேன் என்று கூறும் கமல்ஹாசன், தனது அனைத்து படத்திலும் தான் எப்படி இருக்கிறாரோ? அப்படியே நடிக்க வேண்டியதுதானே. தசாவதாரம் படத்தில் பத்து மாறுபட்ட வேடத்தில் நடிக்கிறார். அவர் இருப்பது போலவே நடித்தால் அவருகே சலித்து விடாதா? ஆனால் உலகில் எந்த வித்தியாசமும் இருக்கக்கூடாது என்பது வேடிக்கையாக அல்லவா இருக்கிறது.
கடவுளுக்கு அனைத்து மொழிகளும் தெரியும், மௌனமும் புரியும் என்பது ஆன்றோர்கள் வாக்கு. அப்படியிருக்க இறைவனுக்கு தமிழ் தெரியாது என்று இவராக புரிந்துகொண்டு பேசுவது சிறுப்பிள்ளைத்தனமானது. அதுமட்டுமல்ல இவர் வேற்று மொழியில் நடிக்கும்போது அந்த மொழியை அறிந்துகொண்டு அந்த மொழியில் பேசி நடிப்பது இல்லையா?
அப்படி இறைவன் எல்லோருக்கும் பொதுவானன். இறைவனுக்கு செய்யப்படும் வழிபாட்டு மொழியை வைத்து அரசியல்வாதிபோல பேசி குழப்புவது ஏன்?
இப்படி அவர் பேசிய ஒவ்வொரு கருத்தும் அவருக்கே உடன்பாடாக இருக்காது என்பது அனைவருக்கும் தெரியும். அவரது பிறந்த நாளில் அவருக்கு எல்லோரும் வாழ்த்து கூறிக் கொண்டிருக்கையில், ஏன் இப்படி பேசி தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறார்” என்று காட்டமாக ராமகோபாலன் அறிக்கை விட்டார்.
இந்த நிலையில், கமல் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தவிருப்பதாக தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்துத்துவ அமைப்பினர், “நடிகர் கமல்ஹாசன், தொடர்ந்து இந்து மதத்தை கேவலமாக பேசி வருகிறார். பலமுறை கண்டனம் தெரிவித்தும் தனது போக்கை அவர் மாற்றிக்கொள்ளவில்லை. இந்த முறை அப்படியே விடப்போவதில்லை. தனது பேச்சுக்கு கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என போராட்டம் நடத்தப்போகிறோம்” என்று கூறுகிறார்கள்.
இதையடுத்து இந்துமுன்னணி தரப்பில் விசாரித்தோம். “ஆலோசித்து அறிவிப்போம்” என்றார்கள்.
கமல் நடிக்கும் “தூங்காவனம்” திரைப்படம் நாளை தீபாவளி அன்று தமிழகம் உட்பட உலகின் பல பகுதிகளில் வெளியாகிறது. இந்த நிலையில் கமலுக்கு இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆகவே தூங்காவனம் படம் வெளியாகும் திரையரங்குகளில் இந்த அமைப்புகள் போராட்டம் நடத்துமோ என்கிற பதட்டம் ஏற்பட்டுள்ளது. அந்தப்டத்தில் கமல் – த்ரிஷா முத்தகாட்சி ஏற்கெனவே பல தரப்பினரால் கண்டனம் தெரிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.