கொல்கத்தா

துர்கா பூஜையும் மொகரமும் அடுத்தடுத்து வருவதால் மொகரம் அன்று துர்க்கை அம்மன் சிலைகளை கரைக்க வேண்டாம் என மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேற்கு வங்காள மாநிலத்தில் தசரா அன்று துர்கா பூஜை விமரிசையாக கொண்டாடுவது வழக்கம்.   வங்காள மக்கள் தாங்கள் பூஜை செய்த துர்க்கை அம்மனின் சிலைகளை தசரா முடிந்த பின் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பார்கள்.  ஆனால் இந்த வருடம் தசராவுக்கு அடுத்த நாள் மொகரம் வருகிறது.   இதனால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

துர்கா பூஜை கமிட்டிகளின் பிரதிநிதிகளுடன் அவர் பேச்சு வார்த்தை நடத்தினார்.  அந்த கூட்டத்தில் மம்தா பானர்ஜி, “இந்த வருடம் விஜய தசமி எனப்படும் தசரா செப்டம்பர் 30 ஆம் தேதி வருகிறது.  நமது வங்க வழக்கத்தின்படி அடுத்த நாளான அக்டோபர் 1 அன்று துர்க்கை அம்மன் சிலைகளைக் கரைப்போம்.   ஆனால் அக்டோபர் 1 அன்று மொகரம் வருகிறது.   இஸ்லாமியர்களுக்கு மொகரம் என்பது பண்டிகை அல்ல,  துக்க நாள்.  ஆகையால் மொகரம் அன்று கொண்டாட்டத்துடன் துர்க்கை அம்மன் சிலை கரைப்பு ஊர்வலங்கள் நடத்த வேண்டாம்.

ஏற்கனவே தவறான புகைப்படங்களை மீடியா மூலம் பரப்பி சில விஷமிகள் மதக்கலவரத்தை ஏற்படுத்து உள்ளனர்.  நாம் அவர்களுக்கு இன்னொரு வாய்ப்பு அளிக்கக்கூடாது.  இதில் அனைத்து மதத்தினரும் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும்.  செப்டம்பர் 30ஆம் தேதி 6 மணிக்கு மேல் துர்கா பூஜையின் அனைத்து கொண்டாட்டங்களும் நிறுத்தப்பட வேண்டும். அம்மன் சிலை கரைப்பு அக்டோபர் 1ஆம் தேதிக்கு பதில் அக்டோபர் 4ஆம் தேதி நடத்த வேண்டும்.  இதில் துர்க்கா பூஜை கமிட்டிகளுக்கு பெரும் பொறுப்பு உள்ளது.  அதை மனதில் கொண்டு அவர்கள் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.