டில்லி:
சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சாமியார் ராம் ரஹீம் சிங்குக்கு துரோணாச்சார்யா விருது வழங்க இந்திய யோகா கூட்டமைப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரிந்துரை செய்திருந்த தகவல் வெளியாகியுள்ளது.
சிறந்த பயிற்சியாளர்களுக்கு மத்திய விளையாட்டு துறை சார்பில் வழங்கப்படும் இந்த விருது பெற ராம் ரஹீமுக்கு தகுதி இருப்பதாக அந்த பரிந்துரையில் அதன் தலைவர் அசோக்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘‘இவரிடம் பயிற்சி பெற்ற நீலம் மற்றும் கரம்தீப் ஆகியோர் கடந்த ஆண்டு நடந்த உலக மற்றும் ஆசிய கோப்பை போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளனர். அதனால் உலக யோகா சாம்பியன்களை உருவாக்கிய இவரது பங்களிப்பு வெளியில் தெரியாமல் இருந்து விடக் கூடாது.
அதோடு, பல சர்வதேச யோகா நட்சத்திரங்களை இவர் உருவாக்கியுள்ளார். அதனால், அமைச்சக விதிமுறைகளின் படி ராம்ரஹீம் சிங் பெயர் துரோனாச்சாரியா விருதுக்கு பரிந்துரை செய்தேன்’’என்று அகர்வால் அப்போது தெரிவித்திருந்தார்.
மேலும், 20 ஆண்டுகளில் சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கிய இரு பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கும் ராம் ரஹீம் சிங் பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
மத்திய விளையாட்டு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘‘கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு யோகா முன்னுரிமை விளையாட்டு பட்டியலில் சேர்க்கப்பட்டது. ஆனால் இதற்கு கூட்டமைப்பு அமைத்து தேசிய அளவில் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்துவதில் சிரமம் இருந்ததால் கடந்த டிசம்பரில் இந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டது’’ என்றனர்.
ஆனால், ‘‘யோகா இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் அங்கிகரிக்கப்பட்டுள்து. எனினும், மத்திய அரசால் அங்கிகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு கூட்டமைப்புகள், இந்தி ஒலிம்பிக் சங்கம், விளையாட்டு மேம்பாட்டு மற்றும் கட்டுப்பாட்டு வாரியம், மாநில மற்றும் யுனியன் பிரதேச அரசுகள் போன்றவை விருதுக்கு பரிந்துரை செய்யும் பெயர்கள் விளையாட்டு அமைச்கத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அமைச்சகம் தான் இறுதி முடிவு எடுக்கும்’’ என்று அசோக்குமார் தெரிவித்தார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ராம்ரஹீம் சிங் சினிமா தயாரிப்பதில் மிகவும் ஆர்வமாக இருந்துள்ளார். 5 படங்களில் அவரது பெயர் இயக்குனர், எழுத்தாளர் என்று இடம்பெற்றிருந்தது. மேலும், கோரியோகிராபர், பாடகர், இசையமைப்பாளர், காஸ்டியூமர், செட் டிசைனர், திரைக்கதை எழுத்தாளர், பின்னணி குரல், சண்டை பயிற்சி, மேக் அப், சிகை அலங்காரம் உள்ளிட்ட பல துறைகளில் அவர் பெயர் இடம்பெற்றிருந்தது.
இவ்வளவு பரபரப்பாக சினிமாவில் பணியாற்றிய ராம் ரஹீம் எப்போது நேரம் ஒதுக்கி உலக யோகா சாம்பியன்களுக்கு பயிற்சி அளித்தார் என்பது யாருக்கும் தெரியவில்லை.
இந்நிலையில், ஜனாதிபதி மாளிகையில் விளையாட்டு வீரர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று விருதுகளை வழங்கினார். இதில் தமிழகத்தை சேர்ந்த வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு அர்ஜூனா விருது, பேட்மிண்டன் பயிற்சியாளர் ஜிஎஸ்எஸ்வி பிரசாத்துக்கு துரோணாச்சார்யா விருதை ஜனாதிபதி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘‘ஒரு வேளை ராம் ரஹீம் சிங் சிறைக்கு செல்லாமல் இருந்திருந்தால் மத்திய பாஜ அரசு அவருக்கு இந்த விருதை வழங்கி கவுரவித்திருந்தாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை’’ என்றும் அரசியல் நோக்கர்கள் தெரிவித்தனர்.