j

“அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களை நலவாரியங்களில் பதிவு செய்து கொள்ளவும் புதுப்பித்துக்கொள்ளவும்  நலத்திட்ட உதவிகள் பெற்றிடவும் விண்ணப்பங்களை இணையதளம் மூலமாகவே  விண்ணப்பிக்கலாம். சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் நிலை குறித்து சம்பந்தப்பட்ட தொழிலாளியின் கைப்பேசிக்கு தகவல் அனுப்பப்படும்” என்று ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு அறிவித்திருக்கிறது. .

இது அமைப்பு சாரா தொழிலாளர்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. அவர்கள், “மாவட்டத்தின் கடைக்கோடியில் இருப்பவர்களும் தலைநகரில் இருக்கும் அலுவலகத்துக்கு நேரடியாக சென்று பதிவு செய்ய வேண்டியிருக்கிறது.  புதுப்பிக்கவும், நல உதவி பெறவும்கூட நேரடியாக செல்ல வேண்டியிருக்கிறது. இதனால் வேலைக்குச் செல்ல முடியாமல் போகிறது.  அதோடு பயண செலவும் ஆகிறது.  இப்போது இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது” என்கிறார்கள்.

தொழிலாளர்களின் மகிழ்ச்சி ஒரு புறம் இருக்க.. இந்த அறிவிப்பு வேறு ஒரு விவகாரத்தைக் கிளப்பியிருக்கிறது.

new pon

கட்டுமானம் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் பொன்.குமார், “என் முயற்சியால்தான் ஜெயலலிதா அரசு, தற்போது ஆன்லைன் மூலம் விண்ணப்பம் அளிக்கலாம் என்று அறிவித்துள்ளது” என்று பேச ஆரம்பித்திருக்கிறார்.  இந்த விவகாரம் குறித்த  வழக்கையும் சுட்டிக்காட்டுகிறார்.

இது, மற்ற  தொழிற்சங்க அமைப்பைச்  சேர்ந்தவர்களிடையே கொதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.   “தற்போது கருணாநிதியின் தீவிர ஆதரவாளராக இருக்கும் இவர் சொல்லியா முதல்வர் ஜெயலலிதா கேட்பார்?” என்று ஆத்திரத்துடன் கேள்வி எழுப்புகிறார்கள் அவர்கள்.

இந்த விவகாரம் பற்றி, அ.தி.மு.க.வைச் சேர்ந்த சிங்காநல்லூர் எம்.எல்.ஏ.  சின்னசாமியை தொடர்புகொண்டு பேசினோம். இவர் அண்ணா தொழிற்சங்கத்தில் பொதுச் செயலாளராக இருந்தவர்.

tblArasiyalnews_45158022643

அவர், “கட்டிட தொழிலாளர் நலனுக்காக நலவாரியம் 2001- 2002ம் ஆண்டு அம்மா ஆட்சியில்தான் கொண்டு வரப்பட்டது.  இந்த பொன்.குமார், 2001 – 2006 வரை அ.தி.மு.க.வோடு அ.தி.மு.க. வுடந் நெருக்கமா இருந்தார்.  அம்மா இவரை, கட்டிட தொழிலாளர் வாரிய தலைவரா நியமிச்சாங்க. அப்போ முறைகேடான வழியில..  பல கோடி ஊழல் செய்தவர்தான் இந்த பொன்.குமார்.

அதனால அம்மாகிட்ட நான், “அம்மா…  நீங்க ஆரம்பிச்ச நல வாரியத்துல பல முறைகேடுகள் நடந்திருக்கு. தொழிலாளர்கள், மாவட்ட தலைநகர அலுவலகத்துக்கு வந்து போக சிரமப்படுறாங்க. தவிர இடைத்தரர்களா சிலர் உருவாகி தொழிலாளர்களை ஏமாத்துறாங்க. அதனால ஆன்லைன்லேயே தொழிலாளர்கள் விண்ணப்பம் அனுப்ப ஏற்பாடு செய்யுங்கம்மா. உங்களுக்கு நல்ல பெயர் வரும்” னு சொன்னேன்.

அதையடுத்தான் அம்மா, இந்த உத்தரவை போட்டிருக்காங்க.

மத்தபடி பொன். குமார் சொல்றதெல்லாம் பொய்தான்.  விளம்பரத்துக்கு ஆசைப்பட்ட  இப்படிப் பேசுவது பொன். குமாருக்கு வாடிக்கையாகிவிட்டது.

இப்படித்தான் சமீபத்தில் “அஞ்சுக்கு ஒண்ணு” என்ற படத்தில் கட்டிடத் தொழிலாளர்களை கேவலப்படுத்தும் காட்சிகள் இருப்பதாகவும் அந்தப் படத்தை தடை செய்வோம் என்றும் சர்ச்சையைக் கிளப்பினார்.  ஆனால் அந்தப் படத்தில் அப்படி ஏதும் காட்சிகள் இல்லை. தவிர, அந்தப் படத்தின் இயக்குநர் ஆர்வியார், தயாரிப்பாளர் எவர்கிரீன் எஸ் சண்முகம் ஆகியோர், “ சுயவிளம்பரத்துக்காகவோ, எங்களை மிரட்டி பணம் பிடுங்குவதற்காகவோ பொன்.குமார் இப்படிப் பேசுகிறார்” என்று பதிலடி கொடுக்கவும், அடங்கினார்.

அதே பாணியை இப்போது அரசிடமும் காண்பிக்கிறார். இது நல்லதல்ல!” என்று ஆவேசமாய் சொல்லி முடித்தார் சின்னசாமி.

இது குறித்து பொன்.குமாரின் கருத்த அறிய தொடர்புகொண்டோம். அவரது எண் நாட் ரீச்சபிளில் இருந்தது. விரைவில் அவரது கருத்தை கேட்டு பிரசுப்போம்.