vijayakanth-tiruma
திமுக கூட்டணிக்கு தே.மு.தி.க. வரலாம் இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். ஆனால், அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலினோ கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடமில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார். தேமுதிகவுக்கு புதியதாக அழைப்பு எதுவும் விடுக்கவில்லை. இதுவரை பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று வேண்டா வெறுப்பாகவே பேசிவருகிறார்.
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ‘’ நண்பர் விஜயகாந்த் தான் ‘கிங்’ ஆகத்தான் இருப்பேன். கிங் மேக்கராக இருக்க விரும்பவில்லை என்று காஞ்சீபுரம் மாநாட்டில் கூறினார். அதன் பின்னர் அவர் தனி அணி அமைத்து சட்டசபை தேர்தலை சந்திப்பேன் என்று தெளிவுப்படுத்தினார். அதன் பிறகும் விஜயகாந்த் தங்களது அணியில் இணைய வேண்டும் என்று கருணாநிதி முயற்சி செய்து கொண்டு இருக்கிறார். இடைவிடாமல் சலிப்பு இல்லாமல் அவர் மேற்கொள்ளும் தொடர் முயற்சியை நான் பாராட்டுகிறேன். அவரிடம் நான் கற்றுக்கொள்ள வேண்டிய அரிய தலைமை பண்பை நான் பார்க்கிறேன். ஆனால் நண்பர் விஜயகாந்த் தனது நிலையில் உறுதியாக இருப்பார் என்று நான் நம்புகிறேன். அவர் அடைய வேண்டிய நோக்கத்திற்கு உடன்பட்டு வருகிற மக்கள் நலக்கூட்டணியோடு இணைய வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம் எங்கள் முயற்சி.
தே.மு.தி.க.– தி.மு.க. இணைவதாக இருந்தால் அமைச்சரவையில் இடம் வேண்டும் என்றும் துணை முதல்வர் பதவி வேண்டும் என்றும் விஜயகாந்த் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தெரிகிறது. ஆனால் மு.க.ஸ்டாலின் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் இடமில்லை என்று சொல்வதன் மூலம் தி.மு.க. அணியில் விஜயகாந்தை சேர்த்து கொள்ள அவர் விரும்பவில்லை என்பது இதில் இருந்து தெரிய வருகிறது’’என்று கூறியுள்ளார்.